அவல் தோசை
வீட்டில் தோசை மாவு தீர்ந்து விட்டதா? சப்பாத்தி செய்யும் அளவுக்கு பொறுமை இல்லையா? ஆர்டர் செய்து சாப்பிடுமளவு வாய்ப்பு இல்லையா? கவலைய விடுங்க.
வீட்டில் அவல் இருந்தால் இந்த அவல் தோசையை செய்து பாருங்கள். இது மிகவும் எளிமையானது. அத்துடன் தோசை மாவு வாங்குவதற்காக கடைக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
வீட்டிலேயே எளிமையாக அவல் தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
ஒரு கப் அவல்
கால் கப் அரிசி மாவு
ஒரு வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
சிறிது பெருங்காயத்தூள்
1 டேபிள் ஸ்பூன் சீரகம்
2-3 பச்சை மிளகாய்பொடியாக நறுக்கியது
1 சிறிய இஞ்சி துண்டு பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை நறுக்கியது
உப்பு தேவைக்கேற்ப
செய்வது எப்படி?
அவலை நன்கு அலசி தண்ணீரில் கழுவி வடித்துக் கொள்ளவும்
பின்பு நல்ல தண்ணீரில் 15 – 20 நிமிடங்கள் அவலை ஊற வைக்க வேண்டும்
அத்துடன் அரிசி மாவையும் கலந்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளலாம்
அந்த மாவில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி துண்டு, கொத்தமல்லி இலைகளை போடவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்
பின்பு சாதாரணமாக தோசை ஊற்றுவது போல் தோசை கல்லில் ஊற்றவும்
ஆனால் தோசை கல்லில் ஊற்றியதும் சுற்றிலும் தேய்த்து பரப்பிவிட வேண்டிய அவசியம் இல்லை
அவல்-அரிசிமாவு தோசை என்பதால் அதுவே தானாக பரவிக் கொள்ளும்
வீட்டில் அவல் இல்லாவிட்டாலோ அல்லது பிடிக்காவிட்டாலோ, அவலுக்கு பதில் ஓட்ஸ் போட்டும் தோசை செய்யலாம்.
இதற்கு தேங்காய் சட்னி அல்லது கார சட்னி வைத்து சாப்பிடலாம்.
ஏற்கனவே இந்த அவல் தோசையில் உப்பு காரம் போடப்பட்டு இருப்பதால் அதனை வெறுமனே அப்படியேவும் சாப்பிடலாம்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் கொத்தமல்லி இலை ஆகியவற்றையும் அதில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஓட்ஸ், அவலுக்குப் பதிலாக வறுத்த ரவையும் சேர்த்தால் ரவா தோசை ரெடி.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.