உடல் பருமனும் – மாதவிடாய் நிற்கும்போது வரும் பிரச்னைகளும். . .
தாறுமாறான நாட்களில் உதிரப்போக்கு, அதிக அளவு ரத்தப்போக்கு ஓரிரு நாட்கள் தென்படுதல், அதிக அளவு இரவு நேரத்தில் வியர்த்து போதல், பிறப்புறுப்பில் அதிக சூடு, எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், பிறப்புறுப்பு வறண்டு போதல், அரிப்பு, உடலுறவின் போது வலி, அடிக்கடி சிறுநீர் பாதையில் இன்பெக்ஷன் வருவது, அடிக்கடி சந்தோஷமும் சோகமும் மாறி மாறி வந்து தாக்குவது, மயக்கம் போன்ற உணர்வு, உடல் எடை அதிகரித்தல் உள்ளிட்டவை மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகளாக சொல்லப்படுகிறது.
கருப்பை இனப்பெருக்கத்துக்கான ஹார்மோனை சுரக்கும் பணியை நிறுத்துவதைத்தான் மெனோபாஸ் அல்லது மாதவிடாய் என்று கூறுகிறோம்.
கிழக்கு விர்ஜீனியா மெடிக்கல் ஸ்கூல் நார்ஃபாக்கில் உள்ளது. அங்கு உள்ள டாக்டர் அனிதா பர்சாத் என்பவர் 119 நோயாளிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்த ஆய்வறிக்கையானது, 2021 ஆம் ஆண்டில் நடக்கும் மெனோபாஸ் சொசைட்டியின் ஆண்டு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அதன் சாராம்சங்களில் என்னென்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்கலாம்.
பாடி மாஸ் இன்டெக்ஸ் எனப்படும் பிஎம்ஐ 30 அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளை கொண்ட உடல் பருமனான பெண்கள் 119 பேர் 5 ஆண்டுகளாக இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் மாதவிடாய் நிற்கும் காலத்தில் இருந்தனர்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் பருமன் இல்லாத இருப்பவர்களுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இல்லை என்றாலும் அவர்களின் வயது, மாதவிடாய் நிற்கும் காலம், ஹார்மோன் தெரபி ஏற்றுக்கொள்ளும் விதம் அல்லது பயன்படுத்தும் விதம், உடல் பருமனாக இருத்தல் கருப்பு அல்லது வெள்ளை நிறமாக இருத்தல் உள்ளிட்டவை தாக்கத்தை ஏற்படுத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
இதில் உடல் பருமனாக இருந்த பெண்களில் பிறப்புறுப்பில் அதிக எரிச்சல், அரிப்பு உணர்வை உணர்ந்துள்ளனர். பருமனான பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் அதிகமாக தென்பட்டன. அதே சமயம் ஹார்மோன் தெரபி எடுத்துக்கொண்ட பருமனான பெண்களுக்கு அதன் பலன் மிகக் குறைவாகவே கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
எனவே பாடி மாஸ் இன்டெக்ஸ் எனப்படும் பிஎம்ஐ சரியாக சீராக பராமரிக்காத பெண்களுக்கு ஹார்மோனல் தெரப்பி கொடுத்தாலும் கூட அதன் முழுமையான பலன் கிடைக்காது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மெனோபாஸ் சொசைட்டியின் மெடிக்கல் டைரக்டர் ஸ்டஃபனி, பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட 40% பெண்கள் உடல் பருமனாக இருப்பதாகவும் அவர்கள் மாதவிடாயை சந்திக்கும் போது அதிக பிரச்சனைகளை எதிர் கொள்வதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே இந்த ஆய்வு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் அறிகுறிகளை குறைப்பதற்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவும் என்றும் கூறியுள்ளார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.