கனடாவாழ் இந்தியர்களுக்கு சிக்கலா? என்னதான் பிரச்னை?

இந்தியாவும் கனடாவும் நட்பு நாடுகள்தான். இரு நாடுகளுமே பல ஆண்டுகளாக கைகோர்த்துதான் பல ஒப்பந்தங்களில் பரஸ்பர நம்பிக்கையோடும், ஆதாயத்தோடும் கையெழுத்துக்கள் இட்டு வந்தன. இன்று அந்த உறவில் ஒரு விரிசல் வந்துள்ளது.

என்ன பிரச்னை?

கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியாதான் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்திலேயே சந்தேகம் எழுப்பி குற்றச்சாட்டு வைத்தார்.

இதற்கு முன் பிரச்னை வந்ததில்லையா?

இதற்கு முன்பும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷயத்தில் இருநாடுகளின் உறவுகளிலும் லேசான உரசல் இருந்து வந்தது. ஆனால், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக இந்தியா மீது இதற்கு முன் கனடா குற்றச்சாட்டை முன்வைத்ததில்லை. அதை ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் செய்துவிட்டார் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

யார் இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார்?

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் தனி மனிதர்தான். ஆனால், அவர் ஒரு சீக்கியர். அதிலும் காலிஸ்தான் ஆதரவு சீக்கியர். பொதுவாகவே சீக்கியர்கள் எப்போதும் எங்கு சென்றாலும் ஒரு இனமாக ஒற்றுமையாக இருப்பவர்கள். அவர்கள் காலிஸ்தான் ஆதரவு கொள்கையைக் கொண்டவர்களாக இருப்பதால் அது ஒரு இனத்தைச் சார்ந்த மனிதர் மீது நடத்தக்கூடிய படுகொலையாகவே சீக்கியர்களால் பார்க்கப்படுகிறது.

சீக்கியர்கள் யார்?

சீக்கியர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை கனடாவில் இருமடங்காகியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோரின் முக்கியக் கோரிக்கை காலிஸ்தான் நாடு.

காலிஸ்தானா? அது எங்க இருக்கு?

காலிஸ்தான் என்பது பெரும்பாலான சீக்கியர்கள் தங்களுக்கு தாங்களே உருவாக்க நினைக்கும் தனி நாட்டின் பெயர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பஞ்சாப்பில் வசிக்கும் சீக்கியர்களை மட்டும் பிரித்து, காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

கனடாவில் 2-வது முறையாக ஆட்சியமைக்க ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி 20 இடங்களையும், ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி 24 இடங்களையும் பிடித்தன. ட்ரூடோ ஆட்சியமைக்க சீக்கியராக ஜக்மீத் சிங் உதவினார். எனவே ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, இந்தியா மீது கொலைப்பழியை ட்ரூடோ சுமத்துவதாகக் குற்றச்சாட்டு உள்ளது.

இந்தியர்களுக்கு எப்படி பாதிப்பு?

கனடாவில் ஐடி, மருத்துவம், தொழில்நுட்பம் என பல மட்டங்களிலும் அதிகப்படியான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல்வேறு இந்திய ஐடி நிறுவனங்களும் கனடாவில் கிளை பரப்பி, ஆயிரக்கணக்கான இந்தியர்களை வைத்தும் வேலை வாங்கி வருகிறது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி, ஏற்றுமதி, இறக்குமதியிலும் கனடா குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

கொலைக்குப் பின் விரிசல்

நிஜ்ஜார் கொலைக்கு இந்தியா மீது சந்தேகம் தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இரு நாடுகளும் அவரவர் தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. கனடா நிறுவனங்கள் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களில் போட்ட முதலீட்டைத் திரும்பப் பெற்றன. இந்தியா கனடாவுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. அந்நாட்டுக்கு பயணிப்போருக்கும் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது.

ஐடி நிறுவனங்கள்

இருநாட்டினருக்குள்ளும் எழுந்த சிக்கல்களை ஐடி நிறுவனங்கள் பொறுமையாகக் கண்காணித்து வருகின்றன. ஒருவேளை பிரச்னை பூதாகரமாக வெடித்தால், அங்கு பணியாற்றும் ஐடி நிறுவன இந்திய ஊழியர்கள் நாடு திரும்பலாம் என்று கூறப்பட்டது. ஆனால், “அவ்ளோ சீன்-லாம் இல்லை” என்பது போல் பிரச்னை பெரிதாகாது என நாஸ்காம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளும் இரு நாட்டில் எந்த நாட்டுக்கு ஆதரவளிப்பது என்ற குழப்பத்தில்தான் உள்ளன. பிரச்னையை சுமூகமாக முடிக்க கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE