இத குடிக்கலன்னா புரட்டாசிக்கு நான்வெஜ் சாப்டாம இருக்குறதுல பலனில்ல

வார்த்தைக்கு வார்த்தை தசாவதாரம் அசின் போல ‘பெருமாளே, பெருமாளே’ என அழைப்போரும் சரி, புரட்டாசி வருகிறதே என அதற்கு முந்தைய நாள் கறி, மீன், முட்டை என ஒரு பிடி பிடிப்போரும் சரி. பெரும்பாலானோர் புரட்டாசி மாதம் முழுக்க அசைவம் சாப்பிடாமல் இருப்பதைப் பார்க்கிறோம். சனிக்கிழமைகளிலோ அல்லது தினம் தோறுமோ பெருமாள் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

செப்டம்பர் மாதம் மத்தியில் இருந்து அக்டோபர் மத்தியில் வரை உள்ள புரட்டாசி மாத்தில் திருமணம் செய்யக் கூடாது, அசைவம் சாப்பிடக் கூடாது என சொல்வது ஏன் என்று தற்போது பார்க்கலாம்.

ஆன்மீகம் என்ன சொல்லுது?

புரட்டாசி மாதத்தில் சூரியன் “கன்னி” ராசியில் பெயர்ச்சியாகி தென்னோக்கி நகரும். தென்திசை எமதர்மன் இருக்கும் திசை. எனவே இந்த மாதத்தில் புதனையும், அக்கிரகத்தின் அதிபதியான மகாவிஷ்ணுவையும் வழிபடுவதால் சனி, ராகு, கேது தோஷங்கள் நீங்கலாம். புதன் சகல கலா வல்லவர் என்பதால் புத்திக் கூர்மை, கற்றல், நல்லறிவைக் கொடுப்பதாக நம்பப்படுகிறது.

செய்யப்படாதவை

வீடு வாங்குதல், கிரகப்பிரவேசம், வாடகைக்கு குடிபுகுதல் போன்றவை இம்மாதத்தில் செய்யப்படுவதில்லை.

அறிவியல் என்ன சொல்லுது?

புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு சில அறிவியல் காரணங்களும் உள்ளன. இம்மாதம், வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும். புவி வெப்பத்தை குறைக்கும் பொருட்டு,சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும் மாதம் புரட்டாசி. எனவே, இது உடல் சூட்டை அதிகரித்து செரிமான உறுப்புக்களின் செயல்பாட்டை குறைக்கும். வயதானவர்களுக்கு இதயத்துடிப்பும் மூச்சு வாங்குதலும் அதிகரிக்கக் கூடும். இதனால்தான் அசைவம் சாப்பிடக் கூடாது என முன்னோர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அது சரி, அசைவம் சாப்பிடாமல், சாமி கும்பிட்டால் மட்டும் உடல் சூடு குறையுமா என்றால் இல்லை. அசைவம் சாப்பிடாமல் இருப்பது என்பது உடல் சூட்டை மேலும் அதிகரிக்காமல் இருக்கத்தான்.

எனவே, இம்மாதத்தில் அதிகரிக்கும் உடல் சூட்டைக் குறைக்க தினமும் வெறும் வயிற்றில் துளசித் தண்ணீர் குடிக்க வேண்டும். இது பெருமாளுக்கு உகந்த செடியாக பார்க்கப்பட்டாலும், உடலுக்கு மிகவும் நல்லதுதரும் மருத்துவ குணம் மிக்கது என்பதை மறுப்பதற்கில்லை. இதனால் தான் தினமும் குளித்து கோவிலுக்கு சென்று அங்கு துளசி போட்ட தண்ணீரைத் தீர்த்தமாக வாங்கிக் குடித்துவிட்டு வந்தபின்தான் சிலர் காலை காபியே பருகுகின்றனர்.

அதேபோல் மோர், இளநீர் போன்றவையும் அவ்வப்போது குடிக்கலாம். வாரத்தில் ஒரு நாள் காலையில் சாப்பிடாமல் விரதம் இருப்பதும் நல்லது. அது சனிக்கிழமையாக இருந்தால் பெருமாளுக்கு விரதமிருந்து கிடைக்கும் புண்ணியமும் கிடைக்கும். உடல் எரிப்பதற்கு கலோரிகளைத் தராவிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை எரித்துவிடும். எனவே, விரதம் கூட நல்லது தான்.

ஆனால் சர்க்கரை, ரத்தக்கொதிப்பு, இன்ன பிற நோய்களுக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் விரதம் இருப்பது அவர்களது உடலுக்கு நல்லதல்ல. அதேபோல் கர்ப்பிணிகளும், குழந்தைகளும், முதியவர்களும் கூட விரதம் இருப்பது கூடாது என மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE