தமிழகத்தில் பிள்ளையார் என்றும் வடநாட்டில் விக்னேஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டாலும் முழுமுதற் கடவுள் ஆனைமுகன் தான் இரண்டுமே என்பதை மறுப்பதற்கு இல்லை.

வினை தீர்க்கும் விநாயகரை கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி அன்று, அவரது திருவுருவத்தை களிமண்ணிலோ, மஞ்சளிலோ பிற மங்கலப் பொருட்களிலோ செய்து வழிபட்டால் வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தி என கொண்டாடும் நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி முதல் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

பிள்ளையார் தோன்றிய வரலாறு

சிவன் பார்வதியின் மகனான பிள்ளையாரின் பிறப்புக்கு பல கதைகள் உள்ளன. அதில் ஒன்று இதோ.

சிவபெருமான் வெளியே சென்று இருக்கும் நேரத்தில், தன்னை காப்பதற்காக பார்வதியால் குளிக்கும் மஞ்சளை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு உருவம் தான் பிள்ளையார். தான் குளிக்கும் போது குளியலறை நுழைவாயிலை பாதுகாக்கும் பணி பிள்ளையாருக்கு கொடுக்கப்பட்டது. யாராக இருந்தாலும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்பது உத்தரவு.

வெளியே சென்று இருந்த சிவபெருமான் வீடு திரும்பும் போது பார்வதியை சந்திக்க சென்றபோது பிள்ளையாரால் தடுக்கப்பட்டார். சிவபெருமான் யார் என்பதை அந்த பாலகன் அறிந்திருக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் கோபமும் ஏற்பட்டது. இதனால் சிவன், பிள்ளையாரின் தலையை துண்டித்தார்.

கடும் கோபம் அடைந்த பார்வதி தேவியை சமாதானப்படுத்த மீண்டும் உயிர்ப்பித்து தருவதாக உறுதி அளித்தார் சிவபெருமான். தலையைத் தேடி வடக்கு நோக்கி பயணித்த தேவர்கள் பாலகனின் தலை கிடைக்காததால் ஒரு வெட்டப்பட்ட யானையின் தலையை பொருத்தினார்.

இதனால்தான் விநாயகருக்கு யானை முகம் வந்ததாக ஒரு கதை உண்டு.

எப்படி கொண்டாடுவது?

பிள்ளையார் அவதரித்த தினமான இந்த நாளில் ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரம் பார்த்து பூஜித்து வழிபடுவது நல்லது.

விநாயகர் சிலையை வீட்டில் செய்து வைத்தாலும் சரி அல்லது வெளியில் வாங்கி வந்தாலும் சரி சிலையை தரையில் வைக்காது, ஒரு மேஜை போட்டோ பலகை வைத்தோ, தட்டு வைத்தோ தான் எடுத்து வர வேண்டும்.

அதிகாலையில் எழுந்து குளித்து வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். ஒரு சிலர் விநாயகருக்கு பிடித்தமான விருட்சமான அரச மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட இலைகளிலிருந்து தோரணம் கட்டுவார். அரச மர இலை என்பது விநாயகர் உருவில் இருப்பதாக நம்பப்படுகிறது.

விநாயகருக்கு துண்டு உடுத்தி, பூணூல் செய்து சாற்ற வேண்டும். சந்தனம் தோய்த்து இடது பக்க தோளில் பூணூலை சாத்தி, வலது பக்கம் இடுப்பில் 3 முடிச்சுகள் போட வேண்டும்.

பூஜை அறையிலோ அல்லது விநாயகர் சிலை அருகிலேயோ ஒரு மனையை வைத்து அதன் மேல் கோலம் போட வேண்டும். தலைவாழை இலையின் நுனி வடக்கு பார்த்தால் போல் இருக்க, இலையில் பச்சரிசியை பரப்பி விடவும்.

பச்சரிசியின் நடுவே களிமண்ணில் அல்லது ஏதேனும் மங்கலப் பொருட்களாலோ செய்யப்பட்ட விநாயகர் சிலையை பிள்ளையராக பிடித்து வைக்க வேண்டும். எருக்கலம் பூ மாலை அல்லது துளசி மாலை விநாயகருக்கு அணிவிக்கலாம். அருகம்புல் மாலை அணிவிப்பதும் மிகவும் சிறப்பு.

சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து வைத்து, தேங்காய், பூ. பழம், வெற்றிலை போன்ற தாம்பூலத்தை வைத்து வணங்க வேண்டும்.

அருகம்புல், செண்பக மலரால் அர்ச்சிக்கலாம்.

நைவேத்தியங்கள்

கொழுக்கு மொழுக்கென இருக்கும் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை என்றால் மிகவும் பிடிக்கும். அப்பம், மோதகம், முறுக்கு, சுண்டல், பச்சரிசியால் செய்த கொழுக்கட்டையை படைக்கலாம். அவருக்கு விருப்பமான ஸ்னேக்ஸ் ஆக கருதப்படும் எள்ளுருண்டை, பாயசம், வடையுடன் நைவேத்தியம் படைக்கலாம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை. . . என்ற பாட்டில் வருவதுபோல், பால், தேன், வெள்ளம், முந்திரி அவல் ஆகியவற்றை எடுத்து அவற்றை ஒன்றாக கலந்து நைவேத்தியமாக படைக்கலாம்.

அதேபோல் ஆவணியில் அதிகம் விளையும் கம்பும், சோளமும் பிள்ளையாருக்கு படைப்பார்கள்.

விரதம்

விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து சுவாமியை தரிசித்தால் தொழில், வியாபாரம் முன்னேறி கடன் தொல்லைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

10 நாட்கள் விழா முடித்ததும் பாரம்பரியமாக விநாயகர் சிலைகளை நேரில் கரைப்பது தங்களது பிரச்சனைகளை உடன் சேர்த்து கரைப்பதாக நம்பப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE