“பொட்டப்புள்ளைய படிக்க வைக்கத்தான் அதிகம் செலவு பண்ணனும்”-படுகரினத்தில் முதல் பெண் விமானி

ஊர் வாய அடைச்சு படுகர் இனத்தில் முதல் பெண் விமானியை உருவாக்கிய பெற்றோர்

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பல பகுதிகளிலும், மலைவாழ் கிராமங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். இந்த சமுதாய ஆண்கள் ராணுவம், கடற்படையில் பணியாற்றினாலும் பெண்கள் இதுபோன்ற சேவைகளில் அதிகம் ஈடுபடவில்லை.

இந்த வகையில் நீலகிரி படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் முதன் முறையாக விமானியாக தேர்வாகி அசத்தியுள்ளார். கோத்தகிரி அடுத்த நெடுவிலா குறுக்கத்தியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விஏஓ மணி என்பவருக்கும்- மீரா என்பவருக்கும் பிறந்த ஜெயஸ்ரீ, தன் பெற்றோரை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தையுமே பெருமைப்படச் செய்துள்ளார்.

ஜெயஸ்ரீ பள்ளி படிப்பை கோத்தகிரியில் முடித்தார். இதன் பின்தான் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்து, சில காலம் ஐடி துறையில் பணியாற்றினார். அதன் பின்பே, விமானியாக முடிவு செய்து தென்னாப்பிரிக்காவில் பைலட் பயிற்சி பெற்றார்.

“எங்க சமுதாயத்தில அண்டை மாவட்டத்துக்கோ, மாநிலங்களுக்கோகூட படிக்க அனுப்ப தயங்குவாங்க. அப்படிப்பட்ட சூழ்நிலையில மற்றொரு நாட்டுக்கே, அதுவும் ஆபத்தான விமான பயிற்சி பெற, தைரியமாக என்னோட அம்மா அப்பா அனுப்பினாங்க.” என பெருமிதத்தோடு கூறினார்.

“அதேபோல் கல்யாணம் கட்டிக் குடுக்குற பொட்டப் புள்ளைக்கு போய் இவ்வளவு செலவு தேவையா? என்று பலர் கேள்வி கேட்ட போதும் என் அப்பா அம்மா பெண் குழந்தைக்கு தான் இவ்வளவு செலவு தேவை என்று நெத்தியடி பதிலை அளித்தனர்.”

“பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை, என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் வழக்கமான வேலைகளை விட விமான வேலையில் சவால்கள் அதிகம். குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் உடல், மனநல பரிசோதனையில் தோற்றால், விமானியாக பணியைத் தொடர முடியாது. இதனால் பணியையே இழக்கவும் நேரிடலாம்.”

“விமானியாக வர விரும்புவோருக்கு மன தைரியம் அதிகம் வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்ப கால பள்ளி படிப்பும் அங்கிருந்த ஆசிரியர்களும்தான். எமது சமுதாயத்திலே முதன்முறையாக பெண் விமானி ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

நீலகிரி மாவட்டத்திலும் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. நீலகிரியில் வாழும் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வான கோத்தகிரி ஜெயஸ்ரீக்கு த காரிகையும் வாழ்த்துகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE