மலைவாழ் மக்களின் ஒடுக்கப்பட்ட வாழ்வை பிரதிபலிக்கும் ஜெய் பீம் படம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இருளர் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருந்தார். இவர் தனது சமூகத்தின் தொழிலான பாம்பு பிடிப்பதை ஒரு தொழிலாகவும் வைத்திருந்தார். பண்ணையார் வீட்டில் பாம்பு படிக்கச் செல்லும்போது அங்கு நடந்த திருட்டு சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருக்குமோ என முதலில் சந்தேகிக்கப்பட்டார். அதன் பின் அவர் செங்கல் சூளை பணிக்காக வேறு மாவட்டத்திற்கு சென்று விடுகிறார்.

அப்போது போலீசார் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் என்பவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தகாத முறையில் விசாரிக்கின்றனர். இதில் ராஜாக்கண்ணு கதாபாத்திரத்தில் உள்ள நபரின் குடும்பத்தினரையும் காவல் நிலையத்தில் அடைத்து வைத்து கொடூரமாக தாக்கி துன்புறுத்துகின்றனர். திருட்டுப் பழி பற்றி எதுவுமே தெரியாது ஊருக்கு வந்த ராஜாக்கண்ணு போலீசில் சிக்கிக் கொள்ள நண்பர்களான இருட்டப்பனும் மொசக்குட்டியும் சேர்ந்து கைதாகின்றனர்.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் அவர்களை துன்புறுத்த அவர்கள் மறுக்கின்றனர். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் நாங்கள் தான் எடுத்தோம் என ஒப்புக்கொள்ளுமாறு சக நண்பர்களே கூற, இந்த பழி காலத்துக்கும் நம்மை துரத்தும் எனக் கூறி மறுக்கிறார் ராஜாக்கண்ணு. கொஞ்சம் அடியை பொறுத்துக் கொண்டால் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்பது அவர் நம்பிக்கையாக இருந்தது. அதே சமயம் போலீசாரும் மிகக் கொடூரமாக தாக்குவதை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே சென்றனர்.

இந்த நிலையில் செங்கேணியை தேடி வரும் போலீசார் “உன் கணவர் தப்பி விட்டார், எங்கிருந்தாலும் மாட்டிக் கொள்வார்” என்றும் கூறி மிரட்டு செல்கின்றனர். அப்போது செங்கேணி தனது கணவரைத் தேடி ஊர் ஊராக சுற்றியும் கிடைக்கவில்லை. இதை அடுத்து சென்னையில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை நாடுகின்றனர். அவர்தான் சூர்யா அவரது உதவியோடு ராஜாக்கண்ணுவைக் கண்டுபிடித்தனரா? என்பதுவே ஜெய் பீம் படத்தில் கதையாக உள்ளது.

ஒரு பழங்குடியின பெண் அதுவும் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள பெண் தனது மகளையும் அழைத்துக் கொண்டு, கொடுக்கும் பணத்திற்கான சமரசத்தையும் ஏற்காமல் நடத்திய சட்ட போராட்டம் ஜெய்பீம் படத்தில் ஒரு உணர்வுபூர்வமான கதையாக பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் தமிழ் படத்துக்கான விருது பிரிவில் கடைசி விவசாயி படம் தேர்வாகியுள்ளது. ஆனால் ஜெய் பீம் படம் ஏன் தேர்வாகவில்லை எனக் கூறி பல சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

“ திரைப்படத் துறையில் ஒரு நபராக ஒற்றுமையோடு தேசிய விருதுகள் அறிவிப்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அதேசமயம் ஜெய் பீம் படத்தை என்ன காரணத்துக்காக நிராகரித்தனர்? என்பதை கூற முடியுமா” என்று கேள்வி எழுப்பி உள்ளார் பி.சி.ஸ்ரீராம்.

போர்த் தொழில் படத்தில் நாயகனாக நடித்த அசோக் செல்வமும் “அனைவருக்கும் வாழ்த்துக்கள், கடைசி விவசாயி படத்துக்கு விருது கிடைத்தது மிகுந்த சந்தோஷம். சரியான தகுதி அப்படத்துக்கு உரியது. அதேசமயம் ஜெய் பீம் படத்துக்கு ஏன் எந்த பிரிவிலும் விருது வழங்கவில்லை?” என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதேபோல இயக்குனர் சுசீந்திரனும் ஜெய் பீம் படத்துக்கு விருது கொடுக்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பிரபல தெலுங்கு நடிகரான நானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெய் பீம் என ஹாஸ்டாகிட்டு அதன் அருகே இதயம் உடையும் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE