சமீபத்திய சாதி மோதல்களால் தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் கலக்கத்தில் உள்ளனர். அரசாங்கம் கடிவாளம் போடாவிட்டால், கட்டவிழ்க்கப்படும் வன்முறைகளுக்கு எப்போது? எந்த உயிர் பலியாகும்? என்றே தெரியாத அளவுக்கு பயம் பீடித்திருக்கிறது. குறிப்பாக வளர்ந்து வரும் இளைய தலைமுறைகளிடமும் சாதிய வெறி கொஞ்சம் கொஞ்சமாக புறையோடி வருகிறது. இதனால், எதிர்கால சந்ததியேனும் சாதியைப் பற்றி பேசவே தயக்கம் கொள்வார்கள் என்ற எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது.

இதனிடையே மதுரை, விருதுநகரை மேற்பார்வையிடும் டிஐஜியாகப் பொறுப்பேற்றுள்ளார் ரம்யா பாரதி. மதுரை மாநகர் அவுட்போஸ்ட் அலுவலகத்தில் உள்ள கோப்புக்களைப் பார்வையிட்டு, கையெழுத்திட்டார். சக காவல் அதிகாரிகளுடன், மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சூழல், சட்டம் ஒழுங்கு, சாதிய மோதல், நில அபகரிப்பு பற்றி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து செய்தியாளர்களிடமும் டிஐஜி ரம்யாபாரதி பேசினார். “காவல்துறை எப்போதும் மக்களின் நண்பனாக இருக்கும். இரவு ரோந்து என்பது சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் அத்யாவசியமானது. எனவே, இரவு ரோந்தில் ஈடுபடும் போது மக்களை சந்திக்க நேரும் போதெல்லாம், அவர்களிக் குறைகளைக் கேட்டு அறிய காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது”. என்றார்.

மேலும் சாதிய மோதல்கள் பற்றியும் பேசிய டிஐஜி ரம்யா பாரதி, “சாதிய மோதல்கள் தொடர்பான புகார்களின் மீது உரிய நடவடிக்கை, துரிதமாக எடுக்கப்படும்” என்றார். இது மதுரை சரக மக்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் வகையிலான பதிலாக அமைந்தது.

“பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தென்மண்டலத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் டிஜஜி குறிப்பிட்டார்.

இதேபோல், மதுரையில் ஏற்கெனவே காவல்துறையினர் எடுத்து வந்த நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். “மதுரையில் ஏற்கெனவே சொத்துக்கள் பறிமுதல் போன்ற பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கைகள் தொடரும்” என்றும் தெரிவித்தார் ரம்யா பாரதி.

தமிழக அரசு எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதேபோல் தாங்களும் முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவோம் என்றார்.

சரி, யார் இந்த ரம்யா பாரதி?

ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும், இரவு நேரத்தில் வட சென்னையில் 2.45 மணி முதல் 4.15 மணி வரை சைக்கிளிலேயே ரோந்து சென்றவர். இதனால் சர்பிரைஸ் ஆன காவல்துறை அதிகாரிகள் பலரும் இவரது தைரியத்தை பாராட்டினர். இது மட்டுமின்றி முதல்வரின் பாராட்டையும் பெற்றவர்.

சமூக சேவையிலும் தன்னை அடிக்கடி ஈடுபடுத்திக் கொள்பவர். 30 வயதிலேயே டிஐஜியாக வலம் வருபவர். பள்ளிப் பருவத்தில் இருந்தே யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வந்தார். முயன்றால் எதையும் சாதிக்கலாம் என வாழ்ந்து காட்டி வருகிறார்.

அவரது பதவியேற்புக்கு “த காரிகை”-யின் குழுவும் பெருமிதத்தோடு வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE