முருகனுக்கு உகந்த ஆடிக் கிருத்திகை
ஆடிக் கிருத்திகையன்று முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலையில் கொண்டாட்டமாக பூஜைகள் நடக்கும். முருகப் பெருமானை மகிழ்விக்க சிறப்புப் பூஜைகள், ஹோமங்கள் நடைபெறும். ஆடிக் கிருத்திகையின் முக்கியச் சிறப்பே காவடி யாத்திரை ஆகும்.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பக்தர்கள் பலரும் ஒன்றாகத் திரண்டு காவடி எடுத்து வர ஓரிடத்தில் கூடுவார்கள். பின் மத்தளம் கொட்டடிக்க, அரோகரா கோஷம் முழங்க காவடியை எடுத்து தோளில் வைத்து சுழன்று சுழன்று ஆடி ஆடி ஆலயத்தை வந்தடைவார்கள்.
திருத்தணியில் களைகட்டும் கொண்டாட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முருகனுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான இக்கோயிலுக்கு ஆடி கிருத்திகை நாளில் ஆண்டுதோறும் சுமார் 4 முதல் 5 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.
திருத்தணியில் நடைபெறும் உற்சவத்தில் மட்டும 4 மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் காவடி ஏந்தி ஆடி வருவார்கள். மலையின் 365 படிகள் ஏறியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள். இக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு 3 நாள் தெப்ப உற்சவம் நடைபெறும்.
அப்படி என்ன ஆடிக் கிருத்திகை விசேஷம்?
கிருத்திகை நட்சத்திரம் முருகனை வழிபட மிகவும் உகந்தது
தட்சிணாயன புண்யகாலத்தின் முதல் மாதம் ஆடி
ஆடி கிருத்திகையில் பக்தர்கள் பூ காவடி எடுத்து செல்வர்
உலகெங்கிலும் முருகன் கோவில்களில் பல சடங்குகள் நடைபெறும்
சண்முகரான முருகனுக்கு ஆடம்பர அலங்காரம் நடைபெறும்
பால், பஞ்சாமிருதம், அரிசி ஆகியவை பிரசாதமாக வழங்கப்படும்
இலங்கை, மலேசியா, தென்னாப்பிரிக்கா சிங்கப்பூரிலும் கொண்டாட்டம் களைகட்டும்
இந்த விசேஷங்கள் மட்டுமின்றி முருகனுடன் தொடர்புடைய பிற சிறப்பு நாட்களில் தைப்பூசமும், கந்த சஷ்டியின் சூரசம்ஹாரமும் நடைபெறும்.
ஏற்பாடுகள்
ஆடி கிருத்திகை முன்னிட்டு, அரக்கோணம் பயணியர் ரயில்கள், திருத்தணி வரை நீட்டித்து, சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன. 8ம் தேதி முதல், 10-ந் தேதி வரை காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த 3 நாட்களிலுமே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவேதான் இந்த ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு கூடுதலாக 100 பேருந்துகளும், அரக்கோணம் – திருத்தணி 25, சென்னை – திருத்தணி 100, திருப்பதி – திருத்தணி 75 பஸ்களும் இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்