ஹாஸ்டல் என்றாலே நினைவுக்கு வருவது நிறைய பேர் ஒரு அறையில் தங்கி இருக்கும் ஞாபகங்கள் தான். இருவர் மட்டுமோ அல்லது 4 பேர் 6 பேர் என குறைவான நபர்களோ தங்குவதற்கான வசதிகள் உள்ள விடுதிகளுக்கு அறைக்கட்டணம் அதிகமாக இருக்கலாம். இதனாலேயே அட்ஜஸ்ட் செய்து காலத்தை கடத்தியோர் ஏராளம். பல பேர் ஒரே அறையை பயன்படுத்துவதால் அங்கு சுத்தமின்மை அதிகமாக இருக்கும். பழைய ஹாஸ்டல்கள் என்றால் சொல்லவே வேண்டாம்

. பாழடைந்த கட்டிடமும் அந்த சுவற்றின் ஈர வாடையும் ஒரு மாதிரியான நெகட்டிவிட்டியை தூண்டி விட்டபடியே இருக்கும். அதுவே, புத்தம் புதிய ஹாஸ்டல் என்றால் காற்றோட்டம் வெளிச்சம் சுத்தமான பராமரிப்பு என வீட்டில் தங்குவது போன்ற ஒரு உணர்வை தரும். அரசு விடுதிகளில் தங்கி இருந்தோர் மீண்டும் ஒரு முறை அந்த சூழலையும் பராமரிப்பையும் நினைத்துப் பார்க்கவே தயக்கம் கொள்ளக்கூடும். ஆனால் அந்த நினைப்பை மாற்ற வந்துள்ளது தோழி என்ற அரசு தங்கும் விடுதி.

இந்தியாவிலேயே முன்னோடியாக அதிநவீன வசதிகள் உடன் தோழி தங்கும் விடுதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அப்படி என்னென்ன அதி நவீன அம்சங்கள் உள்ளன? அதற்கான கட்டணம் எவ்வளவு? என்பதை ‘த காரிகை’யின் கட்டுரையில் பார்க்கலாம்.

பயோமெட்ரிக் வசதி

வீட்டை விட்டு வெளியே சென்று பணிக்காக தங்கும் பெண்கள் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தார்களா? என்ற கவலை அவர்களது வீட்டில் உள்ளவருக்கு இருக்கும். இதற்காக யார் யார் உள்ளே வந்துவிட்டனர் ? என்பதை குறிக்கும் பயோமெட்ரிக் என்ற கைரேகை பதிவு திட்டம் உறுதி. ஏற்கனவே அனைத்து ஹாஸ்டல்களிலும் உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும் கையெழுத்தை பராமரிக்கும் கையேடு எப்போதும் இருக்கும். அதற்கு மாற்றாக இவர் தான் உள்ளே வந்தாரா ? அல்லது இவருக்கு மாற்றாக வேறு யாரேனும் கையெழுத்து போட்டாரா? என்பதை போலியாக ஏமாற்ற முடியாதபடி பயோமெட்ரிக் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் உள்ளே வந்த நபர் எத்தனை மணிக்கு உள்ளே வந்தார்? எத்தனை மணிக்கு வெளியே சென்றார்? என்பதை கைரேகையை வைத்து கண்டுபிடிக்க முடியும்.

சிசிடிவி

மகளிருக்கான தங்கும் விடுதி என்பதால் அதற்கு பாதுகாப்புக்கு எந்த ஒரு குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.எனவே அத்துமீறி மகளிர் விடுதிக்குள் யாரேனும் வந்து விட்டாலோ? அல்லது மகளிர் விடுதிக்குள் பெண்களுக்கு இடையே ஏதேனும் தகராறு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தாலும் உடனே கண்டறியும் வகையில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வைஃபை

பணிபுரியும் பெண்கள் என்பதால் அவர்கள் சில நேரம் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து வேலை செய்ய வேண்டிய சூழல் வரலாம். அதற்காக லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களுக்கு அதிநவீன வைஃபை வசதி தேவைப்படலாம். இந்த தேவையை கருத்தில் கொண்டு தோzhi மகளிர் விடுதிக்கும் வை-பை சேவை வழங்கப்படுகிறது.

24 மணி நேர பாதுகாப்பு

என்னதான் சிசிடிவி உள்ளிட்டவை வைத்தாலும் ஒரு நபர் காவலாளி போல முன்னே இருந்து பாதுகாப்பது போல் இல்லை என்றால், யார் வேண்டுமானாலும் விடுதிக்கு வர நேரிடும். எனவே 24 மணி நேரமும் ஷிப்ட் முறையில் காவலாளிகள் தோழி விடுதிகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.

24 மணி நேர தண்ணீர் வசதி

பொதுவாக ஹாஸ்டல்களில் சனி, ஞாயிறு நாட்களைத் தவிர பிற நாட்களின் போது காலை, மாலை மட்டுமே பைப்புகளில் தண்ணீர் வரும். இடைப்பட்ட நேரங்களில் யாரேனும் பைப்பை திறந்து விட்டபடி சென்று விட்டால் தண்ணீர் வீணாகி விடுமோ என்று காரணத்தினால் தண்ணீர் வசதி நிறுத்தப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் விடுதியில் இருக்கும் பெண்கள் அவசரமாக கழிப்பறையை பயன்படுத்த நேரிட்டால் தண்ணீர் வசதி இன்றி தவிக்க நேரிடும். எனவே இதை கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் தண்ணீர் வசதி வரும் வகையில் தோzhi விடுதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவாம்.

தூய்மையான கழிப்பறை

எவ்வளவுதான் அதிக கட்டணம் கட்டி, சொகுசு வசதி உள்ள ஹாஸ்டல்களில் தங்கினாலும் கூட அங்கே ஒரு சில நேரங்களில் முகம் சுளிக்கும் வகையிலேயே டாய்லெட்டுகள் இருக்கும். இதற்கு ஏராளமான பெண்கள் ஒரே இடத்தில் புலங்குவதே காரணமாகும். இதை பராமரிப்பது சற்று கடினமே. இருப்பினும் தூய்மையான கழிப்பறையை வழங்குவதாக தோழி விடுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீசர்

ஒரு சில விடுதிகளில் குளிர் காலங்களில் கூட சுடு தண்ணீர் தேவைப்பட்டால் அதை காய வைத்துக் கொடுப்பவருக்கு தனியே பணம் கொடுக்கும் நிலை இருக்கும். இதனை தவிர்க்கும் பொருட்டு அனைத்து குளியல் அறைகளிலுமே சூடான தண்ணீர் வரும் வகையில் கீசர் பொருத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

லாண்டரி

பணிபுரியும் மகளிர் என்பதால் அவர்களுக்கு தங்கள் துணியை துவைத்து பராமரிக்க பெரும்பாலும் நேரம் இருக்காது. கிடைக்கும் விடுமுறை நாட்கள் துணி துவைப்பதிலும் அதனை உலர வைப்பதிலுமே பொழுது கழிந்து விடும். இதனை கருத்தில் கொண்டு வாஷிங் மெஷின் வசதியுடன் தோழி விடுதி செயல்படுமாம். தேவைப்படும் மகளிர் அதனை பயன்படுத்தும் வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

அயனிங்

தங்கும் விடுதிகளில் அயன் பாக்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் இது அதிக அளவு மின்சாரத்தை கிரகிக்கும் என்பதால் அடிக்கடி ரைடு வந்து அயன் பாக்ஸ் உள்ளவற்றை விடுதி நிர்வாகங்கள் பறிமுதல் செய்து செல்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால் பணிக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் அயன் செய்த துணிகளையே விரும்பி பயன்படுத்துவார்கள் என்பதால் அவர்களுக்கு ஏதுவாக அயர்ன் பாக்ஸ் வசதியும் தோழி விடுதிகளில் உள்ளனவாம்.

ஆர்.ஓ. வாட்டர்

குடிப்பதற்கு சாதாரண பைப் நீர் இல்லாமல், அதனை சுத்திகரித்து சுத்தமாக பயன்படுத்தும் வகையில் ஆர்.ஓ. வாட்டர் சுத்திகரிப்பு நீர் சாதனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் தண்ணீரால் வரும் நோய் போன்றவை குறையும். வெளி 25 லிட்டர் கேன்களை காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை இருக்காது என்று கூறப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் பேன்ட்ரி, வாகன நிறுத்தும் இடம், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ராம்ப், அறைகளை தூய்மைப்படுத்துவதற்கான பணியாளர்கள், குழந்தைகள் காப்பகம், ஏசி, படிக்கும் அறை, சோபா, டிவி, 3 வேளை உணவு, பால், டைனிங் ஹால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் உள்ளன.

எத்தனை வசதிகள் தனியார் விடுதிகளை போல் இருந்தாலும் அந்த விடுதிகளை விட கட்டணத்தில் ஒரு 10% முதல் 20% வரை குறையும் என்று தோழி விடுதி பற்றி கூறப்படுகிறது.

2 பேர், 4 பேர், 6 பேர் என பல்வேறு நபர்கள் தங்கும் வகையில் உள்ள இந்த விடுதிகலூக்கான கட்டணம் ரூ.6,000 முதல் ரூ.8,500 வரை ஒரு மாதத்திற்கு வசூலிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

எங்கெல்லாம் உள்ளன?

சென்னையில் அடையாறு, வடபழனி உள்ளிட்ட இடங்களிலும் செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தோழி விடுதிகள் உள்ளன. ஒரு சில இடங்களில் இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

தோழி விடுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு 9499988009 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். Home | Tamil Nadu Working Women’s Hostels Corporation (tnwwhcl.in) என்ற இந்த வெப்சைட்டையும் அணுகலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்

You may have missed

Facebook
Instagram
YOUTUBE