ஆடிப் பெருக்கு கதை தெரியுமா?
பிள்ளையார் காகமாய் வந்து அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்க்க, காவிரி நதி உருவானதாகக் கதை உண்டு. அந்த காரிவியைக் கொண்டாடும் ஆடிப் பெருக்கைப் பற்றிய விவரங்களை த காரிகையின் சிறப்புத் தொகுப்பில் தற்போது காணலாம்.
ஒவ்வோராண்டும், 2 அயனங்களாக வகுக்கப்படும். ஆடி முதல் மார்கழி முடிய தட்சிணாயனம். இது மழைக் காலத்தின் தொடக்கம். தை முதல் ஆனி முடிய உத்தராயனம். இது கோடைக் காலத்தின் தொடக்கம். இது பூமாதேசி அவதரித்ததாக புராணங்கள் கூறும்.
மழைக்காலத்தின் தொடக்கமான இந்த ஆடி மாதத்தில்தான் பூமாதேவி அவதரித்தாள் என்கின்றன புராணங்கள். அதேபோல் இந்த தட்சிணாயனக் காலம் தேவர்களுக்கு மாலைப் பொழுது.
அது ஏன் 18?
18 என்ற எண் ஜெயத்தைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் ஆகியவை இதன் அடிப்படையிலேயே அமைந்தன. நீர் பெருக் கெடுக்கும் நதிக்கரைகளிலும் 18 படிகளையே முன்னோர்கள் அமைத்தனர். விவசாயம் செழிக்கும் நீருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினார்கள்.
பெண்கள் எப்படி கொண்டாடுவார்கள்?
10 நாட்களுக்கு முன்பாகவே, நவதானியங்களை விதைத்து முளைப்பாரி எடுத்து நதிக்கரைக்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக செல்வார்கள். பிற்பகலில் ஆற்றங்கரைக்கு பெண்கள் அணிவகுத்து ஆற்றங்கரை செல்வர். பின் முளைப்பாரியை இறக்கி வைத்து, ஆங்காங்கே பெண்கள் வட்ட வட்டமாக கும்மியடித்து வழிபடுவார்கள். பின் ஆற்றங்கரைக்கு செல்வார்கள். அங்கு, கரையோரம் இடத்தை சுத்தம் செய்து, பசும் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைப்பார்கள். பின் முளைப்பாரியை பிள்ளையார் முன் வைத்து, தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி-வெல்லத்தை பிள்ளையாருக்குப் படைத்து வணங்குவார்கள். கும்மி, கோலாட்டத்தை அடுத்து ஆற்றில் இறங்கி முளைப்பாரியை நீரில் விடுவார்கள். வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தாலான பனை ஓலை களைச் சிறிய வட்டமாகச் சுற்றிச் செய்யப்பட்ட காதோலையையும், சிறிய கறுப்பு மணிகளாலான கருகமணியையும் ஆற்றில் விடுவார்கள். கணவனின் ஆயுள் செழிக்க தாலி பிரித்து கோர்ப்பார்கள். நல்ல கணவன் அமைய இறைவனை வேண்டி இளம் பெண்கள் கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொள்வார்கள்.
சிறுவர்கள் எப்படி கொண்டாடுவார்கள்?
ஆடி மாதம் வந்ததும், மரங்கள் தோறும் தூரிகள் ஆடும். குழந்தைகள் மகிழ்ச்சியாக தூரி கட்டி ஒருவர் மாற்றி ஒருவர் 50, 100 என எண்ணியபடியே முறைவைத்து ஆடி விளையாடுவார்கள். மேலும், சிறுவர்கள் சப்பரம் போல் சிறு ரதம் செய்து புது வேட்டி, துண்டு, சில்லறை நாணயங்களை அதில் வைத்து ஊர்வலமாக இழுத்துச் சென்று ஆற்றில் விடுவார்கள். அது வளைந்து நெளிந்து ஆடிச் செல்வதைக் கண்டு கொண்டாட்டம் அடைவார்கள். பின் வீட்டில் இருந்து கொண்டுவந்த தேங்காய் சாதம், தயிர், தக்காளி போன்ற கலவை சாதங்களையும் நொறுக்குத் தீனிகளையும் ஆற்றங்கரையோரத்திலேயே வைத்து சுவைத்து மகிழ்வார்கள்.
அற்புதமான இந்தத் திருநாளில் நாமும் பொன்னி நதியாம் காவிரியைப் போற்றி வழிபட்டு வரம் பெறுவோம்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்