பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் கலைஞர் மகளிர் உரிமை திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அந்த முகாம்கள் வழக்கமாக எங்கு நடக்கும்? எந்தெந்த நாட்களில் நடக்கும்? என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்ற முழு விவரங்களையும் தற்போது “த காரிகை“-யின் சிறப்பு கட்டுரையில் பார்க்கலாம்.

முகாம் நாட்கள்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெறும். அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரை நடைபெறும். அதேபோல் 2-ம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 ஆம் தேதி வரை நடைபெறும்.

எங்கு நடக்கும்?

நியாயவிலைக் கடை பகுதியில் ஒவ்வொரு நியாயவிலை கடை பணியாளரும் முகாம்களை நடத்துவார். இந்த முகாம் நடக்கும் நாள் நேரம் ஆகியவை குறிப்பிட்டு ஒவ்வொரு நியாய விலை கடையில் பலகையிலும் எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் டோக்கன் ஆகியவை வீட்டிற்கு வந்து நேரடியாக வழங்குவார்கள். டோக்கன் வழங்கும் பணியானது முகாம் நடைபெறும் நாளுக்கு 4 நாட்கள் முன்னதாகவே தொடங்கிவிடும்.

நேரில் செல்ல வேண்டுமா?

டோக்கன் பெற யாரும் நேரில் சொல்லத் தேவையில்லை. பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக நியாய விலை கடையை தேடி செல்ல வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலை கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

இந்த விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள ஒரு குடும்பத் தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும். அந்த குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அதனை எடுத்துச் செல்ல வேண்டும். பதிவு செய்வது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்தோடு எந்தவித ஆவணங்களையும் நகலெடுத்து இணைக்க தேவையில்லை என்பதால் ஜெராக்ஸ் கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

என்ன தேவையில்லை?

மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எந்தவித சான்றும் ஆவணங்களும் தேவையில்லை.
இதற்காக விண்ணப்பித்து தருகிறேன் என யாரேனும் பணம் கேட்டாலும் கொடுத்து ஏமாறாதீர்கள். ஒரே நேரத்தில் பலர் கூடுவதற்கு அனுமதி இல்லை. எனவே இதை தவிர்க்கும் பொருட்டு விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரைக்கும் இந்த முகாம் நடைபெறும். முகாமுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் நியாய விலை கடையில் தகவல் பலகையாக வைக்கப்படும்.

ஆதார் இணைப்புள்ள போன் எண் அவசியம்

விண்ணப்ப பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்படும். அவர்களின் கைவிரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு ஓடிபி எனும் ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் கைபேசி எண் இணைக்கப்பட்டிருந்தால் அந்த கைபேசியை முகாமிற்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும். இது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்த உதவும்.

தகுதிகள் என்னென்ன?

குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உதவித் திட்டத்தில் பயன்பெற தகுதி என்னென்ன? என்பதை ‘த காரிகை’யின் சிறப்பு கட்டுரையில் உள்ள இந்த லிங்கில் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE