30 வயதுக்கும் மேல் ஆனாலே, எலும்புத் தேய்மானம் தொடங்கிவிடும். அதனால் அடிக்கடி உடல் சோர்வு, நீண்ட நேரம் நடக்க முடியாது போதல், மூட்டு வலி, முதுகு வலி என முதியோருக்கு வரும் பிரச்னை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கும் வயது இது. அப்போதே அதை ஷூ! போ! எனத் துரத்திவிட வேண்டும். அதனைக் கண்டுகொள்ளாது விட்டால், பின் தேவையற்ற உடல் உபாதைகளுக்கு எல்லாம் வாசற்கதவைத் திறந்து வைத்தார்போல் ஆகிவிடும்.

எனவே, பின்வரும் பொருட்களை உணவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். மிகவும் ஆரோக்யமாக வாழலாம். எலும்புத் தேய்மானத்துக்கு எதிரி கால்சியம் தான். எனவே, அந்த கால்சியத்தை உடலுக்குள் அதிகம் சேர்க்க சேர்க்க எலும்புகளும் வலுப்பெறும். அதற்கு, பால், பச்சை இலைக் காய்கறிகள் உள்ளிட்டவை அவசியமாகும்.

கீரை

தினமுமோ அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறையோ கீரையை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கீரையில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதுமட்டுமின்றி கால்சியமும் அதிக அளவில் உள்ளதால், அதனை சாலடுகளில் போட்டு பச்சையாக சாப்பிடுவது நல்லது. அதை விரும்பாதோர், கீரை கடையல், மசியல், பொரியல் என வகை வகையாக சமைத்து சாப்பிடலாம்.

தண்டுக்கீரை

தண்டு கீரையிலும் கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி உள்ளது. இதனை சூப்பாகவோ அல்லது பருப்பு சேர்த்து மசியலாகவோ செய்து சாப்பிடலாம்.

வெந்தயக்கீரை

வெந்தயக்கீரையில் காணப்படும் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து உள்ளிட்டவை அதிகம் உள்ளன. எனவே, இதை வீட்டுப் பூந்தொட்டியில் கூட வளர்த்து அவ்வப்போது சாம்பாரில் கறிவேப்பிலையைப் போல் கூட கிள்ளிப் போட்டு சமைப்பது நலன் தரும். அவ்வாறு, இதனை நம் அன்றாட உணவில்கூட சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது. சப்பாத்தியிலும் கூட போட்டு சாப்பிடலாம்.

கடுகு கீரை

கடுகு கீரையில் ஏராளமான கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே உள்ளிட்டவை உள்ளன. எனவே, இதனை பொரியலாகவோ, சூப்பாகவோ சமைத்து சாப்பிடுவது நல்லது.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை கால்சியம் புரோட்டீன், நார்ச்சத்து உள்ளிட்டவற்றுக்கான சிறந்த மூலப் பொருளாக அமையும். இதனை குழம்பு, சாலட், சூப்பாக சாப்பிடலாம் அல்லது வேகவைத்து தாளித்த கொண்டைக்கடலையை மாலை நேரங்களில் சாப்பிடுவதும் நல்லதுதான்.

பச்சை பயிர்

பச்சை பயிரில் கால்சியம், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது. இதனை அப்படியே வேகவைத்து சாப்பிடுவதை விட இதனை முளைகட்டி சாப்பிடுவது இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.

துவரம் பருப்பு

துவரம் பருப்பை வாரம் இருமுறையாவது பெரும்பாலானோர் சமைப்பார்கள். இதில் கால்சியம், புரோட்டீன், மற்றும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது.

தட்டைப்பயிறு

கால்சியம், புரோட்டீன், இரும்பு சத்து உள்ளிட்டவை தட்டைப் பயிறில் அதிகம் நிறைந்துள்ளது. இதனை மாலை நேரத்தில் வேகவைத்து, தேங்காய் பூ, போட்டு தாளித்து சாப்பிடலாம். வேகவைத்த தண்ணீரில் உப்பு, பெப்பர் பொடி போட்டு சூப்பாகவும் பருகலாம்.

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம் பருப்பு, முந்திரி, கசகசா, ஆலி விதைகள், சியா சீட்ஸ் உள்ளிட்டவைகளிலும் சத்துக்கள் பொதிந்து கிடக்கிறது. இதனைஉணவுக்கு இடையே பசி எடுக்கும் பொழுது ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள த காரிகை-யின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE