கொரோனா பெருந்தொற்று பரவியபோது, வாழ்க்கை முடங்கிப் போனது. தொழிலைத் தொடர்ந்து செய்ய முடியாமல் சிக்கித் தவித்த நிறுவனங்கள், வீட்டில் இருந்தேனும் பணியாற்றுமாறு நிறுவனங்கள் கோரியது. இதனால், ஆண்கள்-பெண்கள் என இருபாலும் தங்களது வீடுகளில் இருந்தே பணியாற்றி வந்தனர். ஆனால், கொரோனா பெருந்தொற்று குறைந்து 3 ஆண்டுகளாகி இயல்பு நிலையும் திரும்பியதால் வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற பயன்பாடு மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.

தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டன. பிரபலமான ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ம் இதே உத்தரவை சமீபத்தில் பிறப்பித்தது. ஒரு குறிப்பிட்ட தேதியைக் கூறி, “அந்த நாள் முதல் வொர்க் ஃப்ரம் ஹோம் முறை கைவிடப்படுவதால் ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்து பணியாற்ற வேண்டும்” என அந்த உத்தரவில் கூறியிருந்தது.

இந்த உத்தரவு “எப்படா, வீட்டை விட்டு அலுவலகம் செல்வோம்” எனக் காத்திருந்த ஆண்களுக்கு சாதகமாகிப் போனது. ஆனால், வீட்டில் இருந்து கொண்டு குடும்பத்தையும் சமாளித்துக் கொண்டு பணியாற்றி பெண் பணியாளர்களுக்கு பாதகமாகிப் போனது. பெரும்பாலான பெண்கள், “வீட்டுச் சூழல் காரணமாக பணியைத் தொடர முடியவில்லை” என ராஜினாமா கடிதங்களை மேலதிகாரிகளிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய ஹெச்.ஆர். ஹெட் மிலிந்த் லக்கெட், “அலுவலக பணியின்போது வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வாய்ப்பு சில பெண்களுக்கு ஆதாயமாக இருந்ததே, அதிக பெண்கள் ராஜினாமா செய்யக் காரணமாக அமைந்தது” என்று விளக்கம் அளித்துள்ளார்.

டி.சி.எஸ். மட்டுமின்றி இன்ன பிற ஐடி நிறுவனங்கள், அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் தங்களது பெரும்பாலான பணியாளர்களை திரும்ப அலுவலகம் வந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளது.

டிசிஎஸ் குறிப்பாக பெண்கள் பணியாற்ற சிறந்த இடமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் அங்கு பணியாற்றும் சுமார் 6 லட்சம் பணியாளர்களில் 35% பேர் பெண்கள். உயர் நிலைப் பொறுப்புக்களிலும் 4-ல் 3 பேர் பெண்களாகவே இருந்தனர். தற்போது அதிக பெண்கள் பணியில் இருந்து விலகியதாகக் கூறும் நிலையில், இந்த எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றில் வீட்டில் இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான பெண்கள் கருவுற்று, குழந்தை பெற்றதாக பல தகவல்கள் உலவி வருகின்றன. எனவே, குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் இல்லாமையும் பெண்களின் ராஜினாமாக்கள் அதிகரித்திருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

வீடு-குடும்பம்-அலுவல் என அனைத்தையும் சமாளித்து இயங்கிக் கொண்டிருந்த பெண்களின் வாழ்க்கையில் கொரோனா ஒரு பெரும் தடைக்கல்லாக மாறி அவர்களை மீண்டும் வீடுகளில் முடக்கிப் போட்டுவிடுமோ? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்து கொள்ள த காரிகையின் சமூக வலைதளப்பக்கங்களைப் பின் தொடருங்கள்!

You may have missed

Facebook
Instagram
YOUTUBE