அவரவர் உடல் தன்மைக்கு ஏற்றார் போல் உடற்பயிற்சி செய்யும் போது, தேவையற்ற காயம் அடைவது தேவையில்லாத சிரத்தை மேற்கொள்வது உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம் என்கிறார் உடற்பயிற்சி நிபுணர் அமரிந்தர் சிங்.

உடற்பயிற்சி எதற்காக?

முன்பெல்லாம் விவசாயத் தொழில் அல்லது உடல் உழைப்பு அதிகம் உள்ள தொழிலையே மக்கள் அதிகளவு செய்து வந்தனர். எனவே அவர்களுக்கு தனியே உடற்பயிற்சி என்ற ஒன்று பெருமளவு தேவைப்பட்டது இல்லை. சாப்பிட்ட உணவுப் பொருட்களின் கலோரிகள் உடல் உழைப்பு மூலமாகவே ஆரோக்கியமான முறையில் கழிந்தன. ஆனால் இந்த காலத்தில் பெரும்பாலானோர் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டு தங்களது மூளையையும், கை விரல்களையும் மமட்டும் பயன்படுத்தி உழைப்பை மேற்கொண்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். இதனால், உடல் உழைப்பு கிட்டத்தட்ட 90% வரை குறைந்து போனது. இதன் காரணமாக அவர்கள் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலம் சேரும் கலோரிகள், கொழுப்புகள் உள்ளிட்டவை உடலில் பல முக்கிய பாகங்களான இதயம், மூளை போன்றவற்றில் தங்குகிறது. அடைபட்ட பைப் போல, இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதன் விளைவாக இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம், உயிரிழப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

உடற்பயிற்சி என்ன செய்கிறது?

உடற்பயிற்சியின் முதல் ஓர் இரு நாட்கள் தசை இழுத்து பிடிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இது முக்கியமான தசைகளுக்கு அழுத்தம் கொடுத்து கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகளை எரிக்கச் செய்கிறது. இதன் மூலம், தேவையற்ற கொழுப்புகள் உடலில் முக்கிய பாகங்களில் சேர்வதும் அதன் மூலம் நடக்கும் ஆபத்தும் குறைகிறது.

புஷ் அப்

புஷ் அப் என்பது இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து குப்புறப் படுத்துக்கொண்டு இரு கால் விரல்களையும் தரையில் வைத்துக்கொண்டு மேற்கொள்ளும் பயிற்சி. மொத்த உடல் எடையையும் கை மற்றும் கால்களின் வலுவில் தாங்கும் படி உடலை தரையில் இருந்து உயர்த்துவதாகும். இதுபோல் மேலே தூக்கியும் கீழே இறக்கியும் தொடர்ந்து செய்வது புஷ் அப் எனப்படுகிறது. புஷ் அப்பின் போது 63% உடல் எடை உயர்த்தப்படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் 100 கிலோ எடையில் இருந்தால், 63 கிலோ எடையை புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக தூக்கி தூக்கி கீழே இறக்குவது ஆகும்.

பிளாங்

பிளாங் என்பது இரு முட்டி கைகளையும் தரையில் ஊன்றி, இரு கால்களின் விரல்களையும் தரையில் வைத்து குப்புறப் படுத்துக்கொண்டு செய்வது. உடலை தரையில் இருந்து மேலே தூக்கிப் பிடித்து அப்படியே சிறிது நேரம் வைத்திருப்பது ஆகும்.

பிளாங்க் எப்படி செயல்படும்?

பிளாங்க் என்பது ஒருவகை ஐசோமெட்ரிக் எக்சர்சைஸ் எனப்படுகிறது. வயிறு, பட்டக்ஸ், தொடை, இடுப்பின் மேல் பகுதி, கீழ் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேவையற்ற கொழுப்புக்களையும் அதிகப்படியாக தொங்கும் சதைகளையும் குறைக்க பிளாங்க் பயன்படும். பிளாங்க் செய்வதன் மூலம் தசைகளுக்கு அழுத்தம் கொடுத்து அந்த தசைகளில் வலி ஏற்படுத்துவதன் மூலம் பலப்படுத்துகிறது. எடை கணக்கில் பார்த்தால் அதே 63 கிலோ எடையை விட சற்று கூடுதலாக சிறிது நேரம் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உங்கள் உடலின் எடையை உயர்த்தியப்படியே இருப்பது ஆகும். இது புஷ் அப்புடன் ஒப்பிடுகையில் கடினமான பயிற்சி.

பிகினர்களுக்கு சிறந்தது எது?

பிகினர்கள் எனப்படும் ஆரம்ப நிலவில் உடற்பயிற்சியை தொடங்குவோருக்கு எந்த வகையிலான உடற்பயிற்சி சிறந்தது என்பதையும் உடற்பயிற்சி நிபுணர் அமரிந்தர் சிங் விளக்குகிறார். “முதலில் புஷ்ஷப் செய்து பழக வேண்டும். ஒரே அடியாக ஆர்வக்கோளாறு அதிகமாகி கூடுதல் நேரம் உடற்பயிற்சி செய்தால் அது பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். முதல் ஓரிரு நாள் அல்லது முதல் நாள் இறுதியில் இரவு அல்லது மறுநாள் காலையில் தசைப்பிடிப்பு, அதிக தசை வலி ஏற்படலாம். இந்த வலியானது தசைகளை இறுக்கமானதாகவும் பலப்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் பயிற்சி பெறுவோர் புஷ்ஷப் செய்யலாம். எடுத்தவுடன் பிளாங் செய்வது தவறான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். காரணம் பிளாங்க் செய்வதற்கு அதீத உடல் வலிமை, இறுக்கமான தசை, பலமான உடல் தேவைப்படும். அதற்காக புஷ்ஷப் செய்து உடலை தயார்படுத்தி விட்டு பின்னர் பிளாங்க் செய்யலாம்” என்றார்.

இது போன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள “த காரிகை” – யின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.