பேராபத்தைத் தடுத்து தேவதையான சிறுமியும் மூதாட்டியும். . .

இன்று இரு தேவதைகளையும் அவர்கள் செய்த மேஜிக்கையும் பார்க்கப் போகிறோம். கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடந்தது முதல் அதிசயம். அக்கு என அழைக்கப்படும் குட்டிச் செல்லம் இவானுக்கு 2 வயது. எப்போதும் துறுதுறுவென ஓடி விளையாடும், இவானுக்கு எப்போதுமே பிளே மேட் அவரது அக்கா தியா தான். இவான் பிறந்தது முதலே, அம்மா, அப்பாவுக்கு மட்டுமல்ல அக்காவுக்கு செல்லம் ஆனார். இவான் மீது உயிரையே வைத்துள்ளார் அக்கா தியா.

Ivan And Dhiya. The Well that he fell in.
  • கிணற்றில் விழுந்த இவான்

வழக்கம்போல் இவானும், தியாவும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, இவான் திடீரென வீட்டு வளாகத்தில் இருந்த 35 அடி ஆழ கிணற்றில் திடீரென தவறி விழுந்தார். அங்கிருந்த மற்ற சிறார்கள் திகைத்துப் போய் நின்று கூச்சலிட்டனர். ஆனால், சற்றும் தாமதப்படுத்தாமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மோட்டார் பம்ப் பைப்பை பிடித்து, சரசரவென கிணற்றில் இறங்கினார் தியா.

  • தியாவின் துணிச்சல்

பைப் வழியாக கிணற்றில் இறங்கிய தியா, தண்ணீரில் தத்தளித்த இவானை மீட்டார். ஆனால், குழந்தையையும் வைத்துக் கொண்டு அவரால் மேலே ஏற முடியவில்லை. மேலே இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் கிணற்றில் இறங்கி காப்பாற்றினார். இருவரையும், பத்திரமாக மேலே கொண்டு வந்தார்.

Dhiya Receives gift from Minister’s representatives
  • காயமடைந்த சிறுவன்

சிறுவன் இவானுக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இருந்தபோதும், அவர் ஐசியுவில் வைத்து பாதுகாப்போடு கவனித்துக் கொள்ளப்பட்டார். இவான் வீடு திரும்பும் வரை தியாவுக்கு உயிரே இல்லை என சொல்லலாம். மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.

  • அமைச்சர் பரிசு

தம்பிக்காக உயிரையும் பொருட்படுத்தாது கிணற்றில் குதித்து காப்பாற்றிய சிறுமி தியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இதையறிந்த கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், வீடியோ கால் செய்து சிறுமியைப் பாராட்டினார். அத்துடன் சிறுமிக்கு சாக்லெட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகத்தையும் கொடுத்துள்ளார்.

  • மற்றொரு காவல் தேவதை

8 வயது சிறுமிக்கு உயிரைக் காக்கும் மாய சக்தி இருப்பதுபோல், மூதாட்டி ஒருவரும் ஏராளமான உயிர்களைத் தனது சாதூர்யத்தால் காப்பாற்றி அசத்தியுள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில் 70 வயது மூதாட்டி நூற்றுக்கணக்கானோரை ஒரே நேரத்தில் காப்பாற்றியுள்ளார்.

  • எங்கு, என்ன நடந்தது?

மங்களூருவின் படில்-ஜோகட்டே வழித்தடத்தில் ஒரு மிகப்பெரிய ஆபத்து நேர இருந்தது. மதியம் உணவருந்திவிட்டு 2 மணி சுமாரில் வெளியே காற்றாட நின்றிருந்தார் 70 வயதான சந்திரவதி. அப்போது, திடீரென ஒரு பலத்த சத்தம் கேட்டது. என்னவானது? என சத்தம் கேட்ட இடத்துக்குச் சென்று பார்த்தார். அங்கு, பெரிய மரம் ஒன்று முறிந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்தது. மிகப்பெரிய மரம் என்பதால் அவரால் அதை அசைக்கக் கூட முடியவில்லை.

  • மூதாட்டியின் சாதூர்யம் என்ன?

அங்கேயே குடியிருந்நததால், அது மும்பைக்கு செல்லக் கூடிய ரயில் வரும் நேரம் என மூதாட்டி சந்திரவதிக்கு நன்கு தெரியும். நடக்கவிருக்கும் பேராபத்தை உணர்ந்து கொண்டார். உடனடியாக வீட்டுக்கு ஓடிச் சென்று ஒரு சிவப்பு நிறத்துணியை எடுத்துக் கொண்டார். மரம் விழுந்த இடத்தில் இருந்து சற்று தொலைவுக்கு முன்பே நின்று சிவப்புக் கொடியைக் காட்டினார்.

  • அதிர்ந்துபோன லோகோ பைலட்

தண்டவாளத்துக்கு பக்கவாட்டில் மூதாட்டி ஒருவர் சிவப்புத் துணியைக் காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு ஏதோ ஆபத்து என உணர்ந்து கொண்டார் லோகோ பைலட். உடனடியாக, ரயிலின் வேகத்தைக் குறைத்தார். பின் உரிய நேரத்தில் வண்டியை நிறுத்தினார்.

  • நடக்கவிருந்த பேராபத்து என்ன?

ரயில் மட்டும் அதே வேகத்தில் ராட்சத மரம் மீது மோதியிருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும். ரயிலின் முன்பாகம் மட்டுமின்றி அதன் பின் இணைந்தபடி தொடர்ந்து வந்திருந்த ரயில் பெட்டிகளும், அதில் இருந்த பயணிகளும் சின்னாபின்னமாகியிருப்பார்கள்.

  • இதய நோய் இருந்தபோதும் ஓடிய மூதாட்டி

மூதாட்டி சந்திரவதிக்கு ஏற்கெனவே இதய நோய் உள்ளது. அவர் வேகமாக எதுவும் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இருப்பினும், மூதாட்டி தனது உயிரையும் பொருட்படுத்தாது, ஓட்டமும் நடையுமாக சென்று அத்தனை உயிர்களையும் காப்பாற்றியுள்ளார்.

  • காரிகையின் வாழ்த்து

தன்னுயிர் பொருட்படுத்தாது பிறரைக் காப்பாற்றிய மூதாட்டி சந்திர வதியையும், சிறுமி தியாவையும் The Karigai-யும் வாழ்த்துகிறது. நீங்களும் கமென்ட் செக்சனில் உங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE