முகமும் முடியும் அழகாக இருக்க. . .
காஸ்மெடிக்ஸ்-காக ஆயிரக்கணக்கில் செலவளித்தாலும், முகம் கழுவினால் அந்த மேக்கப் களைந்துவிடும். அதேபோல் தான் சிகை அலங்காரமும். அழகை வெளியே இருந்து கூட்டுவதை விட உள்ளே இருந்தபடியே அழகாக்குவதுதான் ஆரோக்யம். மேக்கப் இல்லாமலே என்றும் இயற்கையாக அழகாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு முகம், தோல், முடி போன்ற அனைத்துக்கும் தேவையான, சீரான ஊட்டச்சத்து கொடுத்து பராமரிப்பது அவசியம்.
குறிப்பாக விட்டமின் சி உள்ள உணவுகள் எப்போதும், உடல்நலத்துக்கு ஆரோக்யம் தருபவை. அதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. சரி, எந்தெந்த உணவுகளில் விட்டமின் சி அதிகம் என்று காண்போமா?
- கொய்யாப்பழம்
விட்டமின் சி என்றாலே ஆரஞ்சுப்பழம் தான் நினைவுக்கு வரும். ஆனால், ஆரஞ்சை விட அதிக விட்டமின் சி உள்ளது. இதில் உள்ள கொலாஜன் என்ற புரோட்டீனானது, தோலின் எலாஸ்டிசிடி எனப்படும் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்தும். அத்துடன் முடி வளரவும் கொய்யாப்பழம் ஆரோக்யமாக இருக்கும்.
- கிவி
சீனாவின் கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் கிவிப்பழத்தில் அதிக விட்டமின் சி உள்ளது. அதுமட்டுமின்றி, விட்டமின் ஈ, பொட்டாசியம், ஃபைபர், மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் உள்ளது. இதுவும் உடல், தோல் மற்றும் முடியின் ஆரோக்யத்துக்கு வழிவகுக்கும்.
- பப்பாளி
பப்பாளியில் விட்டமின் சி மட்டுமின்றி ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிகம் உள்ளன. இது குடல் ஆரோக்யத்தை மேம்படுத்தும். அதன் மூலம் சத்துக்கள் சரிவர உறிஞ்சப்பட்டு முடி மற்றும் தோலின் ஆரோக்யம் மேம்படும். பப்பாளியின் குணநலன்கள் தோலின் பளபளப்புக்கு உதவும்.
- இளநீர்
இளநீரில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. மேலும் மினரல்ஸ், எலக்ட்ரோலைட்ஸ் உள்ளிட்டவையும் அதிக அளவில் உள்ளதால் உடல் ஆரோக்யம் மேம்படும். இளநீரில் உள்ள பொட்டாசியம் முடி வளர்ச்சிக்கும் உதவும்.
- எலுமிச்சை
எலுமிச்சம்பழ ஜூசை தினமும் பருகிவரும்போது, முடியின் வளமும், தோலின் வளமும் மேம்படும். இதில் விட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
- பசுமைக் கீரைகள்
கீரை வகைகள் உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குகிறது. இதில் விட்டமின் சி மட்டுமின்றி பிற ஊட்டச்சத்துக்களும் கொட்டிக் கிடக்கின்றன. இதுவும் உள்ளிருந்து அழகை மெருகேற்றத் தேவையான அனைத்தையும் வாரி வழங்கும்.
- தக்காளி
தக்காளி எப்போதும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தோலைப் பாதுகாக்கும். அதற்கென இதில் ஆன்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. மேலும் தக்காளியில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது.
- குடை மிளகாய்
குடை மிளகாயில் விட்டமின் சி மட்டுமின்றி, சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. கேப்சன்தின், வயலாக்சன்தின், ல்யூடெனின், க்வாரசெடின், ல்யூட்யோலின் போன்ற சத்துக்கள் முகத்துக்கு இயற்கையான பளபளப்புக்கள் தரும்.