28% பேருக்கு மாரடைப்பு அபாயம்!
இந்தியாவில் மாரடைப்பால் உயிரிழப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக ஒதே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் நபர்களுக்கும் மாரடைப்புக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஏற்படும் மொத்த உயிரிழப்புக்களில் 28.1% பேர் மாரடைப்பால் உயிரிழப்பதாக மாநில சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மாநிலங்களவையில் இதுகுறித்த புள்ளிவிவரப் பட்டியலையும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ஐ.சி.எம்.ஆர். ஆய்வு அறிக்கையின்படி 1990-ல் மாரடைப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மொத்த இறப்போர் எண்ணிக்கையில் 15.2%ஆக இருந்ததாகக் கூறியுள்ளது. இதுவே 2023-ல் 28.1% ஆக அதிகரித்துள்ளது. 2017-2018-ம் ஆண்டுகளில் கணக்கெடுப்பு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி
தினசரி புகைப்பிடிப்பவர்களில் – 32.8%
மதுப்பழக்கம் உள்ளவர்களில் – 15.9%
போதிய உடலுழைப்பு இல்லாத – 41.3%
போதிய ஊட்டச்சத்துமிக்க
காய்கறி, பழங்கள் சாப்பிடாத – 98.4%
நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 30 முதல் 60 வயதுடையவர்களுக்கே பெரும்பாலும் மாரடைப்பு அபாயம் அதிகரித்துள்ளதாக ஐ.சி.எம்.ஆர். ஆய்வு எச்சரித்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார மையங்கள், மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஆரம்ப நிலையிலேயே இதய நோய்கள் தொடர்பாக ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து மக்களவையில் திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு விளக்கமளித்தது.
தாய்மார்களுக்கு ஏ.என்.சி. எனப்படும் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. இந்த சோதனையில் முன்கூட்டியே இஸ்கிமிக் வகை இதய நோயை கண்டறிய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்கிமிக் இதய நோய் என்றால் என்ன?
இஸ்கிமிக் இதய நோய் என்பது ( ischemic heart disease) ரத்த தமனிகள் சுருங்குவதால் ஏற்படுகிறது. இதயத்தின் தமனிகள் சுருங்குவதுபோல் இதயத்திற்குச் செல்லும் ரத்தத்தின், ஆக்சிஜனினுடைய அளவு குறையும். அப்போது மாரடைப்பு உள்ளிட்ட பல இதய நோய்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஹார்ட் அட்டேக்கை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
போதிய நீர் அருந்த வேண்டும். உணவில் காய்கறிகளை ஒதுக்கி வைக்காது சாப்பிட வேண்டும். போதிய உடலுழைப்பு மேற்கொள்ள வேண்டும். ஓரிடத்தில் அமர்ந்து பணியாற்றுபவர்கள் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும். பகல் நேர உறக்கம் தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்தைக் கைவிட வேண்டும். புகைப்பிடித்தல் அறவே கூடாது. பான் மசாலா, குட்கா பழக்கம் ஆபத்தானது. அடிக்கடி அதிக எண்ணெய் விட்டு தோசை சாப்பிடுவதை விடுத்து ஆவியில் வேகவைத்த இட்லியை சாப்பிடவும். எண்ணெயில் பொறித்த உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. இனிப்பு வகைகளை அதிகம் உண்ணக் கூடாது. போதிய உடற்பயிற்சி செய்ய வேண்டும். டென்ஷன் ஆகக் கூடிய விஷயங்களை லைட்டாக எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி உடற்பரிசோதனை செய்ய வேண்டும்.