சைவ பிரியர்களுக்கு வத்த குழம்பு என்பது மிகவும் பிடித்த குழம்பு வகைகளில் பிரதான ஒன்றாகும். ஸ்ரீரங்கத்து அக்ரகாரத்து ஸ்டைலில் வத்த குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

Vatha kulambu

தேவையான பொருட்கள்

  1. நல்லெண்ணெய் – தேவையான அளவு
  2. கடுகு – 1 டீஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு – 4 டீஸ்பூன்
  4. கடலைப்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் – 20
  6. பூண்டு – 20 பல்லு
  7. கருவேப்பிலை – 2 கொத்து
  8. உப்பு – தேவையான அளவு
  9. பச்சை அரிசி – 1 டேபிள் ஸ்பூன்
  10. வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
  11. புளி – நெல்லிக்காய் அளவு
  12. காய்ந்த மிளகாய் – 4
  13. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  14. பெருங்காயத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  15. மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
  16. மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
  17. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
  18. துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  19. சுண்டைக்காய் வத்தல் – 1 கப்

அக்ரகாரத்து வத்த குழம்பு செய்யும் முறை

ஸ்டெப் 1

முதலில் ஒரு வாணலியில் வெந்தயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். இரும்பு வாணலியில் செய்தால் இன்னும் சிறப்பு. நெருப்பை சிம்மில் வைத்து வறுக்கவும். வறுத்த பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு வறுத்த வெந்தையத்தை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 2

அதே வானலியில் மிளகு, மல்லி, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், அரிசி, துவரம் பருப்பு போன்றவற்றை சேர்த்து பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டெப் 3

சிறிது நேரம் ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு, நன்றாக அரைத்து, தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது மசாலாவுக்கான பொருட்கள் தயார்.

ஸ்டெப் 4

அடுத்து ஒரு வாணலியில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம், பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளியுங்கள். நன்றாக பொரிந்ததும் அதில் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து சிறிதளவு உப்பு போட்டு நன்றாக வதக்கி கொள்ளவும்.

ஸ்டெப் 5

அடுப்பில் உள்ள பொருட்கள் வதங்கியதும் அதனுடன் சுண்டைக்காய் வத்தல் சேர்த்து வதக்கி, ஏற்கனவே அரைத்து பொடியாக்கி வைத்துள்ள வெந்தைய பொடியை சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

ஸ்டெப் 6

புளிக்கரைசல் சேர்த்து அதனுடன் அரைத்து வைத்த மசாலா பொடி மற்றும் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வெல்லம் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ஸ்டெப் 7

அனைத்தும் ஒன்றாக சேர்த்து கொதித்த பின்னர், தேவையான அளவு உப்பு கறிவேப்பிலை சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விட்டு, இறுதியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இறக்கினால், சூப்பரான அக்ரஹாரத்து வத்த குழம்பு தயார். செக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினால் ருசி மேலும் அதிகமாக இருக்கும்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட வத்த குழம்பு அருமையாக இருக்கும். இதை சூடு செய்து ஓரிரு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் வத்த குழம்பு மிக்ஸ் ஐ விட, வீட்டில் எளிமையாக செய்யும் இந்த வத்த குழம்பு மிகவும் ஆரோக்கியமானது. காரணம், அதில் பதப்படுத்தக் கூடிய ரசாயனங்கள் ஏதும் சேர்க்கப்பட்டிருக்காது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஓரிரு நாட்கள் வெளியே செல்லும்போது இந்த அக்ரஹாரத்து வத்த குழம்பு சமைத்து வைத்துவிட்டு செல்லலாம்.

Facebook
Instagram
YOUTUBE