மாங்காய்ல ரசமா?
பெரும்பாலான தமிழர் வீட்டில் குழம்பு வைக்கிறார்களோ இல்லையோ, ரசம் கண்டிப்பாக வைப்பார்கள். அதிலும் தக்காளி ரசம், புளி ரசம், பூண்டு ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம், பருப்பு ரசம் மட்டுமின்றி நண்டு ரசம் கூட சுவைத்திருப்போம். ஆனால், மாங்காய் போட்டு ரசம் சுவைத்தால், அன்றாட சமையலில் அதுவும் ஒரு உணவாகிவிடும். சுவையாகவும், வித்யாசமாகவும் சமைத்து வீட்டில் உள்ளோரை அசத்த நினைப்பவர்களுக்கு மாங்காய் ரசம் ஒரு நல்ல வாய்ப்பு. அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரைக்க
- பெருங்காயம் – சிறிய கட்டி
- வரமிளகாய் – 3
- சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- பூண்டு – 6 பல்
- அடுப்பில் சுட்ட மாங்காய் – 2
- தண்ணீர் – 2 ½ கிளாஸ்
- தக்காளி – 2
தாளிக்க
- எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி – 1 கொத்து
- வரமிளகாய் – 2
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
மாங்காய் ரசம் செய்முறை
ஸ்டெப் 1
2 மாங்காயை எடுத்து நன்றாக அடுப்பில் சுடவும்
ஸ்டெப் 2
வரமிளகாய் 3, பூண்டு பல் 6, பெருங்காயம் சிறுகட்டி, மிளகு ஆகியவற்றை சேர்த்து மிக்சி பட்டனில் ரிவர்ஸ் / பல்ஸ் மோடில் வைத்து சிறிது கொர கொர வென அரைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 3
சுட்ட மாங்காயின் தோல் நீக்கிவிட்டு இருக்கும் சதையை மட்டும் தனியே எடுத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் அதை சேர்த்து தனியே அரைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 4
தனியே ஒரு பாத்திரத்தில் அரைத்த மாங்காய் விழுது, பொடி செய்த மிளகு, சீரகம், மஞ்சள் தூள், 2 ½ கிளாஸ் தண்ணீர் ஊற்றி கலக்கி வைக்கவும்.
ஸ்டெப் 5
தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கலக்கி 2 தக்காளிப் பழங்களை பிழிந்துவிடவும்.
ஸ்டெப் 6
அடுப்பு பற்ற வைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றவும். அது சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விடவும். பின்னர் வரமிளகாய் 2 சேர்த்து வதக்கவும். ரசக் கரைசலை தாளிப்பில் ஊற்றி சேர்க்கவும்.
ஸ்டெப் 7
ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்தில் மாற்றி பச்சைக் கொத்தமல்லி இலையைக் கிள்ளி போட்டு பரிமாறவும். தேவைப்பட்டால் பச்சையான சின்ன வெங்காயத்தைத் தட்டிப் போட்டாலும் சுவை தூக்கலாக இருக்கும்.
மாங்காயின் மருத்துவ குணங்கள்
- கொழுப்பு அளவைக் குறைக்கும்
- புற்றுநோய் செல்கள் எதிர்ப்பாற்றல்
- இரத்த சோகை
- வெப்ப அதிர்ச்சி
- ஆரோக்யமான கல்லீரல்
- வலிமையான எலும்புகள்
- சருமம், கண்கள், இதய ஆரோக்யம்
- இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்
- மலச்சிக்கலைத் தீர்க்கும்
- உடல் எடையை சீராகப் பராமரிக்க உதவும்