வெண்பொங்கல் கொத்சு
வெண்பொங்கலுக்கு வழக்கமான சட்னி, சாம்பார் செய்து போரடித்துப் போனவர்களுக்கு புதிதாக கொத்சு செய்து அசத்தலாம். சத்தாகவும், சுவையாகவும இருக்கும் இந்த கொத்சு மீதம் வைக்காமல் காலியாகும் வகையில் தீர்ந்துவிடும். தற்போது அதை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
வறுத்து அரைக்க
- கடலைப்பருப்பு – 2 ½ தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – 1 1/2 தேக்கரண்டி
- தனியா – 2 தேக்கரண்டி
- காய்ந்தமிளகாய் – 8
- வெந்தயம் -1/4 தேக்கரண்டி
- பெருங்காயம் – ½ தேக்கரண்டி
கொத்சு செய்ய
- சின்ன வெங்காயம் – 75 கிராம்
- தக்காளி – 1
- கத்தரிக்காய் – ¼ கிலோ
- கடுகு – 1 தேக்கரண்டி
- பாசிப்பருப்பு – 100 கிராம்
- மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
- வெல்லம் தூள் – 1 தேக்கரண்டி
- புளி – 50 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
ஸ்டெப் 1
அடுப்பைப் பற்ற வைத்து பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். அதில் கடலைப்பருப்பு 2 ½ தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு 1 ½ தேக்கரண்டி, தனியா 2 தேக்கரண்டி, 8 காய்ந்த மிளகாய் சேர்க்கவும். 5 நிமிடங்கள் பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும்
ஸ்டெப் 2
5 நிமிடம் வறுத்தபின் ¼ தேக்கரண்டி வெந்தயம், ½ தேக்கரண்டி பெருங்காயத்தூள், சேர்த்து மீண்டும் வறுத்து சூடு ஆற வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 3
வறுத்த பொருட்கள் ஆறிய பின், மிக்சி ஜாரில் சேர்த்து பொடி செய்து அரைத்துக் கொள்ளவும். கொத்சு செய்வதற்கான மசாலா பொருட்கள் தயார்.
ஸ்டெப் 4
அடுத்ததாக தக்காளி, கத்தரிக்காய் இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும். 50 கிராம் புளியை ஊற வைத்து புளித் தண்ணீரைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 5
100 கிராம் பாசிப்பருப்பை நன்றாக வேகவைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 6
அடுப்பைப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் 1 தேக்கரண்டி கடுகு சேர்த்துக் கொள்ளவும். சின்னவெங்காயம், கறிவேப்பிலை போட்டு கிளறிக் கொள்ளவும்.
ஸ்டெப் 7
சிறிது நேரம் கழித்த பின் அடுப்பில் இருக்கும் பொருட்களுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி, கத்தரிக்காய், 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
ஸ்டெப் 8
கத்தரிக்காய் வெந்த பிறகு அதனுடன் புளிச்சாறு ½ கப், தேவையான அளவு உப்பு வெல்லத் தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
ஸ்டெப் 9
கத்தரிக்காயுடன் வறுத்து அரைத்த பொடி 3 தேக்கரண்டி, வேக வைத்த பாசிப்பருப்பு, சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும். கொத்சு கொதித்த பின், கீழே இறக்கி வைத்துவிட்டு கொத்தமல்லி இலை தூவிவிடவும்.
தற்போது சுவையான வெண்பொங்கல் கொத்சு தயார்!