தெரியுமா? 64% பெண்கள் தங்கள் ஆண் Boss’அ விட சிறப்பா பணி செய்வாங்களாம்!
“பணியிடத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் தன்னம்பிக்கை இடைவெளி அதிகம்” – ஆய்வு முடிவு
பெரும்பாலும் பணியிடங்களில் பொறுப்பு, பணப்பலன், சில சமயம் வசைகள் கூட பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் தரப்படும். இதுபற்றி மான்ஸ்டர் சர்வே என்ற வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று, யாரும் எதிர்பார்த்திடாத அதே சமயம் சிறந்த மாற்றம் தரும் ஒரு ஆய்வு முடிவைப் பகிர்ந்துள்ளது.
64% பெண்கள் தங்கள் பாஸ்களின் பணியை மிக எளிமையாகவும், விரைவாகவும், சிறப்பாகவும் தங்களால் செய்திட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பெண்கள் தங்களைப் பற்றி ஆயிரம் துதி பாடலாமப்பா, ஆனால் அது நிஜமாகிவிடுமா? என சில ஆண்கள் சொல்லாம்.
ஆனால், இவ்வாறு கூறிய பெண்களுக்கு மேலதிகாரியாக உள்ள ஆண்களில் 47% பேர் இதனை ஆமோதித்துள்ளது கூடுதல் சிறப்பு. என்னதான் சிறப்பாக பெண்கள் பணியாற்றினாலும் கூட அவர்களுக்கு வாய்ப்பு என்ற ஒன்றை பெரும்பாலானோர் வழங்குவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுவே, கடிவாளமாக அவர்கள் திறமையைக் கட்டுப்படுத்தி விடுவதாகவும் மான்ஸ்டர் சர்வே ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஆண்களைப் போல் அன்றி, பெண்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்புள்ளவர்கள். எனவே, அவர்களுக்கு குடும்பத்துக்கு அத்யாவசியமான நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை, குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணியக காப்பகம், அவர்களின் பொறுப்புக்கேற்ற ஷிஃப்ட் முறைகளை ஏற்படுத்தித் தரலாம் என்றும் அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
இத்தனை பொறுப்புக்களுக்கு மத்தியிலும் பணியிடத்தில் பெண்கள் பாஸ்களை விட சிறந்து விளங்கும் போது, அவர்களுக்கேற்ப சூழலை மாற்றியமைத்து, வாய்ப்பும் அளித்தால், ஆண்களை விட சிறப்பாகவே தலைமைப் பண்புகளில் செயல்பட்டு நிறுவனத்துக்கு கூடுதல் லாபம் ஈட்டித் தரவும் வாய்ப்பு உள்ளது.
ஆய்வின் முடிவு
ஆய்வு – மான்ஸ்டர் சர்வே
பங்கேற்றோர் – 6,487 பேர்
காலம் – பிப்ரவரி
பாஸ்களை விட சிறந்த பெண்கள்
(உண்மை என நம்புவோர்)
பெண்கள் – 67%
ஆண்கள் – 47%