மாதங்களில் அவள் மார்கழி…!
ஆயர் குலத்தில் அவதரித்து உலகை ரட்சித்ததாக போற்றப்படும் கண்ணன், பகவத் கீதையில் தனது சிறப்பைப் பற்றி பார்த்தனிடம் சொல்லும்போது முப்பத்தைந்தாவது சுலோகத்தில் ‘மாதங்களில் தான் மார்கழி’ என்று குறிப்பிடுகிறார்.
தேவர்களின் ஒரு நாளின் துவக்கம் மார்கழி மாதமாக அமைவதால் அந்த நேரத்தில் இறை சிந்தனையுடன் மனிதனும் தன் வாழ்நாளில் நாளினை துவக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆகையால் தான் பகவானும், மார்கழி மாதமாக நான் இருக்கிறேன் என்பதின் கருத்துடன், அந்த மாதம் முழுவதும் இறை நினைவாக இருந்து செயலைத் துவக்கினால் அனைத்து செயல்களிலும் இறையருளால் வெற்றி பெற்று பயனடையலாம் என்பது நம்பிக்கை.
மார்கழி மாதத்தை நோன்பு மாதம் என்றும் கூறுவர். பாவையர் சிறப்புகள் நிறைந்த மார்கழி மாதத்தில் அதிகாலையில் குளித்து விட்டு பாவை நோன்பு இருந்தால் மனதிற்கு பிடித்த, கண்ணுக்கு நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது ஐதீகம். எனவே மங்கையர்க்கான மார்கழியாகவே இந்த மாதம் குறிப்பிடப்படுகிறது. மங்கையர் நல்வாழ்வு வேண்டி நோற்கும் பாவை நோன்பு கார்த்யாயனி விரதம் போன்றவை மார்கழி மாதத்திலேயே பிரதானமாக கொண்டு கொண்டாடப்பெறுகின்றன.
மார்கழி மாதத்துக்கென்று தனி மனமும் குணமும் உண்டு. இந்த மனத்தினால் நாம் பரவசம் அடைவது மட்டுமின்றி நமது உள்ளமும் தூய்மை பெறுகிறது. பனி படர்கிற இளம் காலை நேரத்திலே பாடப்படும் பக்திப் பாடல்கள் நம் இதயத்தின் ஆழ்ந்த உணர்வுகளை உசுப்ப வல்லவை. மார்கழி என்றால் நம் நினைவுக்கு வரும் திருப்பாவை மற்றும் திருவெம்பாவையில் ‘உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்’ என்று முடியும் அதன் இரண்டாவது பாசுரத்திலிருந்து, வாழும் வாழ்வில், உய்யும்வழியைப் பெற்றிட ஆண்டாளும் அவர்தம் தோழியரும் நோன்பு மேற்கொண்டதாக பாவித்து எழுதப்பட்டவை என்பது புரிகிறது.
ஆண்டாளும் மாணிக்க வாசகரும் தங்கள் பாடல்களை ” எம்பாவாய்” என முடியும் வகையில் அமைத்துள்ளனர். இதன் மூலம், தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் முதுமொழிக்கேற்ப மார்கழியில் பாவையர் நோன்பிருந்து வழிபட தை பிறந்தவுடன் அவர்களின் விரதத்தின் பயனாக நல்லதொரு வழி பிறந்து அவர்களின் நோக்கம் நிறைவேறும் என்பது அனுபவ உண்மை.நோன்பு நோற்பதென்பது எளிதன்று. அதற்குப் பல தியாகங்கள் செய்ய வேண்டும். விரதம் மேற்கொண்டோர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்டாள் அருமையாக விவரித்துக் கூறியுள்ளார்.
“நெய்யுண்ணோம்: பாலுண்ணோம்: நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம்: மலரிட்டு நாம் முடியோம்: செய்யாதன செய்யோம்”
என்பதெல்லாம் நோன்பு நோற்போர் கடைப்பிடிக்க வேண்டிய முறை என்று சொல்கிறார் சூடி கொடுத்த சுடர்கொடி.
தமிழர் மரபில் இத்தகைய நீராடல் என்பது சங்ககாலம் தொடங்கியே இருந்து வந்தது என்பதனை தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. சங்க இலக்கிய நூலான பரிபாடல் மார்கழி நீராடலைப் பற்றி எடுத்துரைக்கின்றது. தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்து மாணிக்கவாசகர் இயற்றி திருவெண்பாவையில்,
“போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்“
என்று தங்களை ஆட்கொண்டு, மார்கழி நீராட அருள்புரிந்த சிவனின் பொற் பாதங்களுக்கு வணக்கம் என்று சொல்லும் இந்த வரியிலிருந்து மார்கழியில் நீராடி இறைவனைத் தொழுவதன் மகத்துவத்தை புரிய வைத்துள்ளார்.
இத்தகைய புகழ்களை கொண்ட தேவ மாதமான மார்கழியில் இறைவனை வணங்கி வழிபட்டு நோன்பிருந்து பயன் பெற வேண்டி இந்த மாதத்தை இறை உணர்விற்கும் பக்திக்கும் என ஒதுக்கியுள்ளார். ஆதலால் தான் இந்த மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை.
ஆனால், கண்ணன் கூறிய “மாதங்களில் நான் மார்கழி” என்னும் சொல்லை மறந்து இதனை பீடை மாதம் என குறிப்பிடுகிறார்கள். பெருமைமிக்க மாதமாகிய இதனை பீடுடை மாதம் என்று அழைத்து நாளடைவில் திரிந்து பீடைமாதம் என்று வழங்கத் தொடங்கிவிட்டது. பீடுடை மாதம் எனில் சிறந்த, பெருமைவாய்ந்த, மதிப்புள்ள,உன்னதமான, மகோன்னதமான மாதம் என்று பொருள். அதனால்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் தான் மார்கழி மாதமாக இருப்பதாக பறைசாற்றியுள்ளார்.
ஆத்திக சித்தாங்களை தாண்டி அறிவியல் ரீதியாக அலசினால், இம்மாதத்தில் காற்றில் பிராணவாயு எனப்படும் ஆக்சிஜன் வாயு நிறைந்திருக்கும் என நம்பப்படுகிறது. தமிழ் இலக்கிய பெரும் பொழுதுகள் கார், கூதிர், முன்பனி பின்பனி இளவேனில் முது வேனில் என்பவற்றில் கார்த்திகையும், மார்கழியும் முன்பனிக் காலமாகக் கொள்ளப்படுகின்றன. இந்தப் பருவத்தில் கீழ்க்காற்று வீசும், உடல் குளுமையடையும், புறச்சூழலுடன் நேரடித் தொடர்புடைய உடலின் தோல் சுருங்கும்,மயிர் துவாரங்கள் இறுகும்.இதனால் உடலுக்குத்தேவையான உடலில் உருவான சூடு உள்ளுக்குள் இருந்து நம் சீதோஷ்ணத்தை நிர்வகிக்கும் தன்மை பெறும். இது பெண்களுக்கான உடற் கோளாறுகளுக்கு அரும்மருந்ததாக கருதப்படுகிறது.
அதன் பலனை பெரும் வகையில்தான் கிராமங்களில் பெண்கள் எழுந்திருந்து வாயில் தெளித்து கோலமிட்டு பூ வைத்து குளிர்நீரில் குளித்து இறைவனைத் தொழுதல், வீதிகளில் பஜனை செய்து வலம் வருதல் மற்றும் திருப்பாவை திருவெம்பாவை போன்ற பாசுரங்களைப் பாடி துதித்தல் போன்றவற்றை செய்கின்றனர். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலைபோட்டு விரதமிருந்து மார்கழிமாத்தில் பூஜை, திருக்கோவில் போன்றவற்றிற்கு செல்லுவதும் தை மாத்தில் சபரி மலைக்கு சென்று வருவதும் பழக்கத்தில் உள்ளது.
எந்த ஒரு காரியத்தையும் சிந்தித்து செயல்படுத்த திட்டம் வகுக்கும் நேரம் விடியற்காலையாக அமைந்தால் அமைதியாக சிந்திக்கவும் சிந்தனைக்கு ஏற்ப செயல்படும் வழி முறைகளை அமைப்பதற்கும் நல்ல சூழ்நிலையாக இந்த விடியற்காலை அமையும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து தெரிவித்துள்ளனர் நமது முன்னோர்கள்.
தூங்கி எழும்போது இறைவனின் நினைவோடு எழ வேண்டும் என்பது மரபு. மனிதனின் ஒரு நாள் துவக்கம் இறை சிந்தனையோடு துவங்கினால் அந்த நாள் முழுவதும் இறையாற்றல் மிக்க பயனுள்ளதாக அமையும் என்பது நம்பிக்கை. இத்தகைய, அறிவியல் அடிப்படையிலும் ஐதீக ரீதியிலும் மங்கையருக்கு மங்களம் அளிக்கும் மார்கழியை மனம் நிறைய வரவேற்போம்.