மகப்பேறு இறப்புகளை தடுக்கும் நெல்லை “தாய் கேர் “
மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு கூடுதல் மருத்துவ தேவைகளும், சரியான மருத்துவ ஆலோசனைகளும், தொடர் கண்காணிப்புகளும் தேவை. இவற்றை சரியாக பின்பற்றவில்லை என்றால், மகப்பேறு காலத்தில் ஏற்படக் கூடிய உயிரிழப்புகளை நம்மால் தவிர்க்க இயலாது. இந்த மாதிரியான இறப்புகளை தவிர்க்கும் வகையில், நெல்லையில் உருவாக்கப்பட்டது தான் “தாய் கேர்” ( Thaicare nellai ) இணையத்தளம்.
“தாய் கேர் ” என்ற இணைய வழி செயலி, நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நகர்புற, மற்றும் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா, மாவட்ட மருத்துவமனைகளில் கர்ப்பகால சிகிச்சை பெறும் பெண்கள் கருவுற்ற காலம் முதல் பேறுகாலம் வரையில் மாதந்தோறும் நடைபெறும் தொடர் சிகிச்சை, வழங்கப்படும் மருந்துகள், தாயின் உடல் நிலை, ஊட்டச்சத்து போன்ற விவரங்கள் ‘தாய் கேர் நெல்லை’ என்ற இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்படும். பின்பு, கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் முழு உடல் பரிசோதனை தரவுகளும் டிஜிட்டல் முறையில் பராமரிப்பு செய்யப்படுகிறது. இந்த பதிவுகள் அடிப்படையில் பேறுகால நேரத்தில் அதிக ஆபத்துக்குள்ளாக நேரிடும் பெண்களை அடையாளம் கண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் பிரசவ கால மரணங்களை குறைப்பதுடன், குறை பிரசவமும் தடுக்கப்படுகிறது. தொடர் கண்காணிப்பால் குழந்தைகளை தாக்கும் நோய்கள், குறைபாடுகளை கண்டுபிடித்து சரி செய்யவும் உதவுகிறது.
கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்புகள் இல்லாத நிலையை நெல்லை மாவட்டத்தில் உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். நெல்லை மருத்துவக்கல்லூரி தாய் சேய் நல மருத்துவ வல்லுநர்கள் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான ஆலோசனை மற்றும் ஊட்டசத்து தொடர்பான அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
இந்த சேவையில் முந்தைய கர்ப்பங்களில் ஏற்பட்ட உடல்நல பிரச்னைகள், இளவயது கர்ப்பம் போன்ற 55 பிரிவுகளின் கீழ் உள்ள தரவுகளின் அடிப்படையில், மகப்பேறு ரிஸ்க்கானது தீர்மானிக்கப்படுகிறது.
மே மாதம், நெல்லை மாவட்டத்தில் 4,600 பிரசவங்கள் அதிக ஆபத்துள்ளவை என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதன் விளைவாக, இதுவரை 2,018 பேருக்கு பாதுகாப்பான பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு கருவுற்ற நிலையிலிருந்து பேரு காலம் முடிந்து சுமார் 42 நாட்கள் வரை அனைத்து விபரங்களை ஆராய்ந்து அதன்மூலம் தேவைப்படும் சத்துணவு மற்றும் சிறப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், கருவுற்ற பெண்களின் உடல் நிலையில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
இந்த இணைய செயலியில் பதிவாகும் விவரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட துறைசார்ந்த அலுவலர்கள் காணும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.