75 நிமிடங்களில் 150 வகை சிறுதானிய பொங்கல்!
75 நிமிடங்களில் 150 வகை சிறுதானிய பொங்கல்!
தற்காலத்தில் ஆண்களுக்கும். பெண்களுக்கும் கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கும் போதே சர்க்கரை வியாதி, பிளட் பிரஷ்ஷர் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் வந்து விடுகின்றன.
இந்த 2 வியாதிகளும் தான் உடலுக்கு வரும் அனைத்து வகையான வியாதிகளுக்கும் கதவை திறந்து வைக்கும். இரு வாயிற்கதவுகள் என்று ஏற்கனவே பல மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே ஒரு நபர் சர்க்கரை வியாதியையும், பிபியையும் எவ்வளவு காலம் வராமல் தள்ளி போடுகிறாரோ அவ்வளவு ஆரோக்கியம் அவருக்கு கிடைக்கும் என்று சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கு ஒரே முக்கிய தீர்வு, சிறுதானியங்களும் ஆரோக்கியமான உணவு வகைகளோடு சேர்ந்த உடற்பயிற்சியும் ஆகும்.
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்து இருப்பதில் சிறுதானியங்களின் பங்கு மிகவும் அலாதியானது.
எனவே தான் 2023 ஆம் ஆண்டு சிறுதானியங்களுக்கான ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதன் மூலம் மக்களுக்கு சிறுதானியங்களின் மீதான விழிப்புணர்வும் ஏற்பட்டது.
சாமை, வரகு, குதிரைவாலி உள்ளிட்ட பல சிறு தானியங்களோடு பல வகையான சிறு தானிய உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிட்டு வருகின்றனர்.
எனவே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவையில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை மாணவர்கள் வித்தியாசமான முறையில் பொங்கலை கொண்டாடியுள்ளனர்.
அது உலக சாதனை நிகழ்வாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேட்டரிங் துறையைச் சேர்ந்த 75 மாணவர்கள் 75 நிமிடங்களில் இந்த சமையலை செய்து அசத்தியுள்ளனர்.
அதில் 150 வகையான சிறுதானிய வகைகளை கொண்டு 150 வகையான பொங்கல் செய்யப்பட்டன.
அதில் 75 வகையான பொங்கல் இனிப்பு வகையிலும், மீதமுள்ள 75 வகையிலான பொங்கல் இனிப்பு இல்லாத பொங்கல் என்றும் வகைப்படுத்தி சமைத்து சாதனை படைத்துள்ளனர்.
கதம்ப சாமை பொங்கல், அக்கரவடிசல் தேங்காய் பால், கருப்பட்டி பொங்கல், உக்கரை குதிரைவாலி பொங்கல், வல்லாரை சோலை பொங்கல், எலுமிச்சை பூ பொங்கல், கற்பூரவள்ளி பொங்கல், கொய்யா வரகு பொங்கல், வெற்றிலை கம்பு பொங்கல், நெய் பனிவரகு பொங்கல், பருத்திப்பால் தினை பொங்கல் உள்ளிட்ட 150 வகைகள் இதில் சமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செபாஸ்டின் ஷால்வின், “2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக பரிந்துரைத்தது நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான். அவரைப் போன்றே நாட்டு மக்களும் சிறு தானிய உணவுகளை விரும்பி உண்ணத் துவங்கி உள்ளனர். சிறுதானியங்களை பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த சிறுதானிய சாதனை பொங்கல் நிகழ்வை கல்லூரி மாணவர்கள் எங்களது ஒருங்கிணைப்பின் கீழ் நடத்தி உலக சாதனை படைத்துள்ளனர்” என்றார்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.