33% இட ஒதுக்கீடு, 2039-ல் தான் அமலுக்கு வருமா?

பெண்களும் அரசியலில் அதிகம் பங்கேற்று, சட்ட மன்றம், நாடாளுமன்றத்தில் 33 சதவிகித பிரதிநிதித்துவம் பெற வழிவகுக்கும் மசோதா மக்களவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 454 பேரும், எதிர்ப்பாக 2 பேரும் வாக்களித்தனர்.

பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. நிறைவேற்றப்படாமல் கிடப்பில் இருந்த மசோதாக்களில் முக்கியத்துவமான, அதிகம் விவாதிக்கப்பட்ட ஒன்றாகும்.

இட ஒதுக்கீட்டின் மூலம் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவற்றில் 33 சதவீத இடமானது பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே என ரிசர்வ் செய்யப்படும்.

25 ஆண்டு முயற்சி

25 ஆண்டுகளாக இந்த மசோதாவை கொண்டு வர பல்வேறு கட்டங்களில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அதற்கு பச்சைக்கொடி காட்டும் நேரம் வந்துவிட்டது.

தலைதூக்கும் உள் ஒதுக்கீடு விவகாரம்

2010ல் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் போது மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவுக்கு சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்க் யாதவ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் தேவை என அக்கட்சியின் தற்போதைய தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி வருகிறார்.

அதாவது பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினர், பழங்குடியினர் ஆகியோருக்கான சதவிகிதம் எத்தனை எத்தனை என்பதை தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டர் பதிவில் கோரியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான மாயாவதியும், “பழங்குடியினர், பட்டியல் இனத்தோர் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்” என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இதே போல் பாமக நிறுவனர் ராமதாசும் உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான் சமூகநீதி கட்சிகளின் நிலைப்பாடு என்று குறிப்பிட்டிருந்தார்.

OBC பெண்களுக்கு உரிய ஒதுக்கீடு தரப்படாவிட்டால், அந்த 33 சதவீதத்தையும் உயர்சாதியினரைக் கொண்டே நிரப்பி விடுவார்கள் என்று பல்வேறு கட்சிகள் அச்சம் தெரிவித்து வருவதுதான் உள் இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை வலுப்பெறக் காரணமாக உள்ளது.

தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் மசோதா, நாடாளுமன்ற மக்களவைக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் மாநிலங்களவைக்கும் அதை விரிவு படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது

நடைமுறை சிக்கல்

என்னதான் மக்களவையில் கொண்டுவரப்பட்டாலும் புதிதாக தொகுதி மறுசீரமைப்பு நடந்த பிறகு தான் இந்த சட்டம் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்ற கேள்வி பல்வேறு கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொகுதி மறு சீரமைப்பு எப்போது?

ஒரு தொகுதியின் மறுசீரமைப்பு என்பது அந்தத் தொகுதியில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை பொருத்தே நடக்கும். அடுத்த மக்கள்தொகை இனி 2031 ல் நடக்கும் என எடுத்துக் கொண்டால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் முடிந்து அதை தொகுக்கவே 2035 ஆம் ஆண்டு ஆகிவிடும். இந்த நிலையில் அதற்கு பின் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். எப்படியும் 2039-ம் ஆண்டு தான் இது நடைமுறைக்கு சாத்தியமாகும் என்றும் சில கருத்துக்கள் உலவி வருகின்றன.

என்னதான் பல்வேறு கட்சிகளும் பிற்படுத்தப்பட்டோருக்கான உள் இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுத்து வந்தாலும், அப்படி ஒரு ஒதுக்கீடு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் இந்த சட்டத்தை நிறைவேற்ற பல கட்சிகளும் தயாராகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், டிவிட்டர் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE