அரசு வேலையில் இருந்தபடியே குரூப் 1-ல் டாப் ரேங்கில் வென்ற திருப்பூர் அலுவலர் பெண்கள்

பள்ளி, கல்லூரி படித்தோமா? போட்டித் தேர்வில் வென்று அரசு வேலைக்கு சென்றோமா? என பலரும் அதிலேயே தேங்கிவிடுகின்றனர். ஆனால், ஒரு சிலர் தங்களது பிரமோஷன்களுக்காக கடுமையாகப் படித்து வாழ்வில் முன்னேறி வருகின்றனர். அப்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிவரும் முத்தான 3 உதாரணங்களைப் பார்க்கலாம்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களாக பணியாற்றி வரும் 3 பெண்கள் டாப் ரேங்க்குகளில் தேர்வாகி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.

சுபாஷினி

ஈரோடு மாவட்டம் நம்பியூர் சின்னசெட்டிபாளையத்தை சேர்ந்த 26 வயதான சுபாஷினி பொறியியல் பட்டதாரி. இவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வில் ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர். அதன் மூலம், கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் கூட்டுறவுத் துறை முதுநிலை ஆய்வாளராக பணியாற்றியும் வருகிறார். கிடைத்த வேலை போதும் என நினைக்காமல், அவர் நன்கு படித்து கடும் உழைப்பின் மூலம் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வேலைக்கு இடையே, தொடர்ந்து போட்டித் தேர்வுக்கான படிப்பையும் கை விடாது படித்துவந்தார். அதன்மூலம், தற்போது தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வில் தமிழ்நாட்டில் 49-வது இடத்தில் தேர்ச்சி பெற்று கூட்டுறவுத் துறையிலேயே, துணைப் பதிவாளர் பணிக்கும் தேர்வாகி உள்ளார்.

விவசாயியான காளியப்பசாமிக்கும்-உமா மகேஸ்வரிக்கும் பிறந்த அவர், தன்னைப் பார்த்து தனது தங்கையும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருவதாகக் கூறினார்.

இந்திரா பிரியதர்ஷினி

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் இந்திரா பிரியதர்ஷினி. 28 வயதான இவர் பிஎஸ்சி வேளாண்மையில் பட்டம் படித்தவர். மடத்துக்குளத்தில் வேளாண்மை அலுவலராக 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர், தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதோடு படிப்பை கைவிடவில்லை. கடும் உழைப்பு போட்டு குரூப் 1 தேர்வில் பங்கேற்று மாநில அளவில் 35-ம் இடத்தை பிடித்து, தற்போது வணிகவரித்துறையில் உதவி ஆணையராக பொறுப்பேற்கிறார்.

தனது வெற்றி குறித்து பேசிய இந்திரா பிரியதர்ஷினி “எனது பணி வேளாண்மை அலுவலர் என்பதால் நான் பல்வேறு இடங்களுக்கும் கிராமங்களுக்கும் சென்று விவசாயிகளிடம் குறைகளை கேட்க வேண்டி இருக்கும். பணிச்சூழல் காரணமாக பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு வீடு திரும்பவே மிகவும் தாமதமாகிவிடும். ஆனால் இருந்த போதும் விடாமல் படித்து குரூப் 1 தேர்வை எழுதி வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். இவரது தந்தை கேசவன் செருப்பு வியாபாரம் செய்து வரும் நிலையில், தாய் ரேகா தேவி செஞ்சேரி புதூர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நித்யா

26 வயதான நித்யா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரும் பி எஸ் சி வேளாண்மை படித்து குரூப் 4 இளநிலை உதவியாளராக 4 ஆண்டுகளாக பணியாற்றி வந்த போதும் தொடர்ந்து குரூப்-2 தேர்வில் பயிற்சி பெற்று, வேளாண்மை அலுவலராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னேறினார்.

குரூப் 4ல இருந்து குரூப்புக்கு 2க்கு தேர்வான இவர், தற்போது குரூப் 1 தேர்விலும் தேர்ச்சி பெற்று தமிழக அளவில் 10-வது இடத்தை பிடித்து உதவி ஆட்சியாளராக பொறுப்பேற்கிறார்.
பழனிச்சாமி பழனியம்மாள் தம்பதிக்கு பிறந்த நித்யா பேசும்போது, “குரூப் 1 தேர்வில் 95 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், அதில்3 பேர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல நிலைகளில் பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு வேலை கிடைத்த பின்பும் மனம் தளராமல் தொடர்ந்து படித்து வந்தோம். வாழ்க்கையில் எந்த இடத்திலும் தேங்கவில்லை. அடுத்தடுத்த முயற்சிகளே எங்களை குரூப் ஒன் வெற்றிக்கு வித்திட்டது“ என்றும் கூறினார்.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE