3 நிற ஈ-பாஸ் எதற்கு? ஊட்டி, கொடைக்கானல், மூணார் போறீங்களா? இத படிங்க.

கோடை விடுமுறை தொடங்கியதும் மக்கள் வழக்கமாக படையெடுப்பதை விட தற்போதெல்லாம் கோடை வாசஸ்தலங்களை நோக்கி சற்று அதிகமாகவே படையெடுக்கின்றனர். கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்றே எஸ்கேப் ஆனால் போது என்ற மனப்பாங்கு அதிகமாக உள்ளது.

எனவே தான், தேர்தல் முடிந்த கையோடு ஊட்டிக்கு சென்று ஒரு வாரம் ஆவது தங்கிவிட்டு வரவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு படையெடுப்பவர்களும் அதிகம். இதனால், குறுகலான மலைப்பாதைகளைக் கொண்ட ஊட்டிக்குச் செல்லும் வழிகளில் மக்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. 10 லட்சம் பேர் ஓரிரு மாதங்களில் குவிந்தால் இந்த நிலைதான் ஆண்டுதோறும் ஏற்படுகிறது. நீங்களும் ஊட்டி சென்று இப்படியான ஒரு அனுபவத்தை பெற்றிருந்தால் கமென்டில் சொல்லுங்கள்.

அதிலும் கொண்டை ஊசி வளைவுகளில் பெரிய பெரிய வாகனங்கள் ஏதும் திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டால் அவ்வளவு தான். ஒன் டே ட்ரிப்பாக ஊட்டிக்கு செல்பவர்கள் பாதி நாளை பாதையிலேயே டிராஃபிக் ஜாமில் கழித்துவிட்டு திரும்பிவிடும் நிலை ஏற்பட்டு விடுகிறது.

இதனால் பொறுமையிழந்த சுற்றுலாப் பயணிகளின் தொடர் குமுறலை அடுத்து சில முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

20,000 வாகனங்களா? கொந்தளித்த நீதிமன்றம்

மே 7 முதல் ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் அறிவித்துள்ளது. இதனை நீலகிரி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் முறையாக அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

அதிக சுற்றுலா பயணிகளும் அவர்களது வாகனங்களும் செல்வதால் ஊட்டி கொடைக்கானலில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஊட்டிக்கு தினமும் 1300 வேன்கள் உட்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தனை வாகனங்கள் சென்றால் அங்குள்ள நிலைமை மோசமாகும் உள்ளூர் மக்களால் நடமாட இயலாது என்பதுடன் சுற்றுச்சூழலுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

எனவே, ஊட்டி கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம்? என சென்னை ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் வரையில் வரும் மே 7ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இ-பாஸ் நடைமுறையை போன்ற பின்பற்ற வேண்டும் என்று உத்திரவிடப்பட்டு உள்ளனர்.

ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணவும் அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கு விசாரணை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

மூணார்

கேரள மாநிலம் இடுக்கி மூணாறு பகுதியில் இரவு 7 மணிக்குள் சுற்றுலா பயணிகள் அவரவர் விடுதிக்குள் சென்று விட வேண்டும் என்று மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனித விலங்கு மோதல்கள் அதிகம் நடக்கும் இடுக்கி மாவட்டத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதை அடுத்து தேசிய நெடுஞ்சாலை தவிர மற்ற சாலைகளில் 7:00 மணிக்கு மேல் வாகனங்களில் பயணிக்க கூடாது என்றும் உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே சுற்றுலா பயணிகள் இரவு 7 மணிக்குள் அவரவர் விடுதிகளுக்குள் சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கனரக வாகனங்கள் ஊட்டி மலைப்பாதைகளில் பயணிக்க அனுமதியில்லை.

சனிக்கிழமை, அதவது 27.04.2024 முதல் மே மாதம் இறுதி வரை நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கூடலூரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பேருந்துகள், வேன் உள்ளிட்ட வாகனங்கள் எச்பிஎப், கோல்ப்ஸ் சாலை பகுதியில் நிறுத்தப்படும்.

அதில் வரும் சுற்றுலா பயணிகள் அரசு சுற்றுப்பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மசினகுடியில் இருந்து கல்லட்டி வழியாக ஊட்டி வரும் இலகு ரக வாகனங்கள் தலைக்குந்தா மட்டம், கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக ஸ்டீபன் தேவாலயம் வந்தடையும்.

அதில் தாவரவியல் பூங்கா செல்லும் சுற்றுலா பயணிகள் புதுமந்தில் இருந்து வண்டிச்சோலை வழியாக தாவரவியல் பூங்கா வரலாம்.

கூடலூரில் இருந்து ஊட்டி படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா பயணி வாகனங்கள் பிங்கர்போஸ்டில் இருந்து வலதுபுறம் திரும்பி காந்தல் முக்கோணம் வழியாக படகு இல்ல சாலை மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.

குன்னூரில் இருந்து ஊட்டி வரும் அரசு பேருந்து தவிர அனைத்து சுற்றுலா பஸ்கள், வேன்கள், ஆவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பேருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோத்தகிரியில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் கட்டபெட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு குன்னூர் வழியாக வரவேண்டும்.

பால், பெட்ரோலியம், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் தவிர அனைத்து கனரக வாகனங்களும் சனிக்கிழமை முதல் மே 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஊட்டி நகருக்குள் வர அனுமதி கிடையாது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாகவும் செல்ல வேண்டும்.

ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் மற்றும் கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள் தங்களது நான்கு சக்கர வாகனத்தை கடை எதிரே நிறுத்தக்கூடாது.

அதற்கு பதிலாக இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

epass.tnega.org என்ற இணையத்தில் ஈ-பாஸ்-க்கு விண்ணப்பிக்கலாம். பின் எத்தனை பேர்? எந்த வாகனம்? எங்கு தங்குகிறீர்கள்? வாகன பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் உள்ளீடு செய்து ஓடிபி மூலம் முன்பதிவு செய்யலாம்.

3 நிறங்களில் ஈ பாஸ்

உள்ளூர் மக்களுக்கு பச்சை நிறத்தில் ஈ-பாஸ் வழங்கப்படும்.

வேளாண், விளை பொருட்கள், அத்யாவசியப் பொருட்கள், சரக்கு வாகனங்களுக்கு நீல நிற பார் கோடோடு ஈ-பாஸ் வழங்கப்படும்.

சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதா என்ற பர்பில் நிறத்தில் ஈ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.

Facebook
Instagram
YOUTUBE