200 ஆடு, 300 கோழியோடு பிரியாணித் திருவிழா
எவ்வளவுதான் ஹை ஃபையான ஓட்டல்களில் சென்று சாப்பிட்டாலும் முனியாண்டி விலாஸ் சென்று வியர்க்க விறுவிறுக்க காரசாரத்தோடு ஒரு கட்டு கட்டினால் தான் சிலருக்கு படு திருப்தியாக இருக்கும்.
அப்படிப்பட்ட புகழ்பெற்றது முனியாண்டி விலாஸ் அசைவ உணவுகள்.
திரைப்படங்களில் கூட முனியாண்டி விலாசின் பெயர் அடிக்கடி அடிபடும்.
அந்த அளவுக்கு விளம்பரமே தேவை இல்லாத ஒரு அசைவ உணவகம் என்றால் அது முனியாண்டி விலாஸ் தான்.
இந்தக் கடை தமிழகம் முழுவதும் உள்ளது.
இறைவன் முனியாண்டியின் பெயரில் இந்த கடையை நடத்துவதால் யாரும் இதற்கு காபிரைட்ஸ் வாங்குவதில்லை என்று சொல்லப்படுகிறது.
அப்படி உலகப் புகழ்பெற்ற முனியாண்டி விலாசின் அசைவ உணவுகள் ஆண்டுதோறும் விற்கப்பட்டாலும் ஆண்டில் ஒரு நாள் மதுரையே மணக்கும் வகையில் முனியாண்டி சாமிக்கு அண்டா அண்டாவாக பிரியாணி சமைத்து படையல் இட்டு அதை பிரசாதமாக அனைவருக்கும் வழங்குவார்கள்.
89 ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தான் இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் ஒரு சமூகத்தை சேர்ந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள், பிரியாணி திருவிழாவை நடத்தினர்.
அதேபோன்று மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் முனியாண்டி சாமிக்கு தங்களது நன்றியை செலுத்தும் வகையில் ஆடு கோழிகளை பலியிட்டு படையலிட்டனர்.
வழக்கமாக கோவில் என்றால் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம்,புளி சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் என்றுதான் பிரசாதங்கள் இருக்கும். ஆனால் இந்த பிரியாணி திருவிழா நடக்கும் போது சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அத்தனை பேரும் தங்கள் வீடுகளில் இருந்து பெரிய பெரிய பாத்திரங்களை எடுத்து வந்து பிரியாணியை பிரசாதமாக வாங்கிச் செல்வார்கள்.
பாத்திரம் இல்லாதவர்கள் தோளில் போட்ட துண்டை கழற்றி கூட அதில் பிரியாணியை வாங்கி இலையில் போட்டு பொட்டலம் கட்டி தங்கள் வீடுகளுக்கு எடுத்து செல்வார்கள்.
இரவெல்லாம் காத்திருந்து அதிக அளவில் எழுந்து முனியாண்டி சாமிக்கு விரதம் இருந்து பூ, பழம், தேங்காய் உள்ளிட்டவற்றை சீர்வரிசை போல தலையில் ஏந்தி பெண்கள் சுமந்து வந்து முனியாண்டி சாமியை வழிபடுவார்கள்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த இந்த பிரியாணி திருவிழாவில் சுமார் 200 ஆடுகள் 300 கோழிகள் நேர்த்திக்கடனாக பலியிடப்பட்டன.
பலியிட்ட ஆடு, கோழிகளைக் கொண்டு 20 பெரிய பெரிய அண்டாக்களில் பிரியாணி சமைக்கப்பட்டது. பின்னர் ஐயன் முனியாண்டிக்கு அதனை படைத்து சாமி கும்பிட்டு விட்டு பக்தர்களுக்கு அன்னதான பிரசாதமாக அதனை வழங்கினர். சுமார் 1000 கிலோ சீரக சம்பா அரிசி இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
முனியாண்டிக்கு படைத்துவிட்டு சென்று தொழிலை தொடங்கும் போது அந்த ஆண்டு முழுவதும் நல்ல வருவாய் கிடைக்கும் என்று முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களின் உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ள த காரிகையின் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் பக்கங்களைப் பின்தொடருங்கள்.