12 மணி நேரத்திலேயே ஓட்டும் சிங்கப்பெண்கள்
புல்லட் பைக்குகள் மீது ஆண்களுக்கு மட்டும் தான் காதல் இருக்குமா என்ன? இன்றைய சூழலில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் புல்லட் மீதான காதல் அதிகமாகதான் இருக்கிறது.
நண்பனோ, காதலனோ, கணவனோ புல்லட் வண்டி ஓட்ட, பின்னால் அமர்ந்தப்படி தங்களுக்குப் பிடித்த பாடல்களை முனு முனுத்துக் கொண்டு தங்கள் கனவுகளை காற்றில் கலந்துவிட்டு வந்ததெல்லாம் போதும். சாலையில் கெத்தாக புல்லட் ஓட்ட வேண்டும் என்ற பெண்களின் கனவுகளை நிஜமாக்கி வருகிறது என்ஃபீல்டர்ஸ் என்ற குழு.
மும்பை, பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், புனே உள்ளிட்ட நகரங்களில் பெண்களுக்கு புல்லட் ஓட்ட பயிற்சி வழங்கி வந்த என்ஃபீல்டர்ஸ் குழுவினர் தற்போது சென்னையிலும் பயிற்சி வழங்குகின்றனர். புல்லட் ஓட்ட ஆர்வத்துடன் வரும் பெண்கள் குழுவாக பிரிக்கப்பட்டு, பின்னர் வாரத்தின் இறுதி நாட்களில் 12 நேரம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்த பயிற்சி வகுப்புகள் யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறது, எப்படி வகுப்புகள் எடுக்கப்படுகிறது என்பது குறித்து தகவல்களை என்ஃபீல்டர்ஸ் குழுவின் ஒருங்கிணைப்பாளர் நம்மோடு பகிர்ந்தக்கொண்டார்.
“2014ம் ஆண்டு முதல் பெண்களுக்காகவே இந்த பயிற்சிகளை வழங்கி வருகிறோம். சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பயிற்சி அளிக்கிறோம். நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் என 2 நாளில் புல்லட் வண்டிகளை கையாளுவது குறித்தான முழு விவரங்களையும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துவிடுவோம்” என்கிறார் என்ஃபீல்டர்ஸ் ஒருங்கிணைப்பாளர்.
பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு அவர்களே புல்லட் வண்டிகளை ஏற்பாடு செய்து தருவதோடு, பாதுகாப்பு கவசங்களையும் வழங்கிவிடுகிறார்கள்.
• முதல் நாளில் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் எடை, பெட்ரோல் டேங்க் கொள்ளளவு, கிளட்ச், பிரேக் பிடிக்கும் முறை உள்ளிட்ட அடிப்படைகள் கற்றுக்கொடுப்படுகிறது.
• 2வது நாளில் புல்லட்டில் அமர்ந்து வண்டியை எப்படி சமநிலைப்படுத்துவது, கீழே விழாதப்படி புல்லட்டை எப்படி ஓட்டுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
பைக் மற்றும் புல்லட் பற்றிய எந்த விதமான அடிப்படை தகவல்களும் தெரியாதவர்கள் கூட 2 நாள் பயிற்சியின் முடிவில் ஒரு ஆளை பின்னால் அமரவைத்துக் கொண்டு புல்லட்டை ஓட்டும் அளவு பயிற்சி பெற்று விடுவார்கள். புல்லட் ஓட்டுவதற்கு உயரம், எடை, வயது என எதுவும் தடையில்லை, ‘நம்மால் முடியும்’ என்ற தன்னம்பிக்கை இருந்தாலே போதுமானது என ஒருங்கிணைப்பாளர் கூறுகிறார்.
என்ஃபீல்ட் குழுவின் அடுத்தக்கட்ட பயிற்சி வகுப்புகள் ஜனவரி 7, 8 மற்றும் 21, 22 ஆகிய தேதிகளில் சென்னை அண்ணா நகரில் நடக்க உள்ளது. 2 நாட்கள் முழுமையாக பயிற்சியை முடிக்கும் பெண்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. பயிற்சி வகுப்புகள் பற்றிய விவரங்களை என்ஃபீல்ட் குழுவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம். https://www.instagram.com/enfieldriders
குடும்பம், வேலை என குறுகிய வட்டத்துக்குள் வட்டமிட்ட காலங்கள் மாறி சிறகடிக்கும் மாற்றங்களை நோக்கி பெண்கள் பயணப்பட்டு கொண்டிருக்கும் இச்சமயத்தில், என்ஃபீல்டர்ஸ் குழுவின் இந்த முயற்சியும் பயிற்சி வகுப்புகளும் இறக்கைகளை பெண்களின் முதுகில் கட்டி விடுகின்றன. வாருங்கள் பறப்போம்..