சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பெண்ணை தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கடுமையாகத் திட்டித் தீர்த்து வருகின்றனர். அவர் யார்? அப்படி என்ன குற்றம் செய்தார்? என்பதை த காரிகையின் சிறப்புக் கட்டுரையில் காணலாம்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம். வழக்கமான நாள்தான் என அக்கம்பக்கத்தினர் நினைத்து தங்களது அன்றாடப் பணிகளை ஆற்றி வந்தனர். ஒரு வீட்டுக்குள் மட்டும் இருந்து துர்நாற்றம் வீசியது. வீட்டில் ஆள் இல்லாததால் ஏதேனும் சமைத்த பொருள் கெட்டுப் போய் இருக்கும் என எண்ணி விட்டுவிட்டனர். நாட்கள் சென்றன. ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர் பெண்ணும் 31 வயதானவருமான கிறிஸ்டல் வந்தார்.

கதவைத் திறந்து பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். மூர்ச்சையுற்ற நிலையில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கேன்டலேரியோ படுத்திருந்தது. உலுக்கிப் பார்த்தும் எழவில்லை. குழந்தையின் கீழ் உள்ளாடை முழுவதும் சிறுநீர், மலம். அழுக்கடைந்த பெட்ஷீட். ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். ஆனால், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை மரணத்துக்கான விசாரணையும் தொடங்கியது.

10 நாட்கள் பசியில் வாடிய குழந்தை

ஒன்றல்ல, இரண்டல்ல.10 நாட்கள் குழந்தை பூட்டிய வீட்டினுள் தாய் எனும் ராட்சசியால் தனியே விடப்பட்டிருக்கிறார். ஓரிரு நாட்கள் சமாளித்த குழந்தையால் அதற்கு மேல் முடியவில்லை. பசியாலும், நா வறட்சியாலும் துடிக்கத் துடிக்க தவித்திருக்கிறார்.

எங்கு சென்றார் தாய்?

குழந்தையின் தாய், ஒன்றரை வயதே ஆன குழந்தை என்றும் பாராமல் 10 நாட்கள் சுற்றுலா சென்றிருந்தாராம். போர்டோ ரிகோ தீவு, டெட்ராய்ட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டாராம்.

வீட்டில் யாரெல்லாம் வசித்தனர்?

குழந்தையுடைய தாய் தனது இரு மகள்கள் மற்றும் பெற்றோருடன் வசித்து வந்தார். தாத்தாவும் பாட்டியும் மூத்த பேத்தியை அழைத்துக் கொண்டு வேறொரு சுற்றுலாவுக்கு சென்றுவிட்டனர். தங்களது 2-வது பேத்தியை மகள் பாதுகாப்பில் விட்டுச் சென்றுவிட்டனர்.

கடுப்பான அக்கம் பக்கத்தினர்

அந்த தாய் தனது குழந்தையைத் தனியே விட்டுச் செல்வது இது முதன்முறையல்லவாம். ஏற்கெனவே பல முறை தனியே விட்டுச் சென்றதாகவும், தாங்கள் அறிவுறுத்தியும் அந்த இயல்பை அவர் மாற்றிக் கொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர். தங்கள் வீட்டுக்கதவையாவது தட்டி, குழந்தையை தங்களிடம் விட்டுச் சென்றிருக்கலாம் என்றும் அங்கலாய்த்துக் கொண்டனர்.

தாய் என்ன ஆனார்?

குழந்தையை கேட்பாரின்றி விட்டு, கொடுமைப் படுத்திக் கொன்றதாக தாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை அபராதமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தையைத் தனியே தவிக்க விட்டு சுற்றுலா சென்ற தாயை பலரும் வசைபாடி வருகின்றனர். எத்தனையோ தம்பதிகள் குழந்தை கிடைக்காமல் மருத்துவமனைக்கும், கோவில்களுக்கும் அலைந்து அல்லாடிக் கொண்டிருக்கும் போது, அந்நியாயமாக பெற்ற குழந்தையின் உயிரை அஜாக்கிரதையால் பறித்த தாய்க்கு, அதேபோல் தனி சிறையில் சாகும் வரை தனித்து விட்டு, உணவு நீர் கொடுக்காது கொல்ல வேண்டும் என்றும் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

இதுபோன்ற தகவல்களை அடிக்கடி தெரிந்துகொள்ள த காரிகையின் சமூக வலைதளப் பக்கங்களைப் பின் தொடருங்கள்.

You may have missed

Facebook
Instagram
YOUTUBE