பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட், சிங்கப்பூர் போல் மாஸ் காட்டும் சென்னை
சென்னையில் விற்கும் விலைவாசிக்கும், வாடகைக்கும், அலுவலகத்தின் அருகிலேயே வீடு அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு சிலருக்கே வாய்ப்பு அமைந்திருக்கும்.
குடும்ப சூழல் காரணமாகவும், சென்னையிலேயே சொந்த வீடு இருப்பதன் காரணமாகவும் பலரும் வெகு தொலைவில் பயணித்து பணியாற்றிவருகின்றனர். காலை, மதியம், மாலை, இரவு என ஷிஃப்ட் அடிப்படையில் வேலை செய்வோர் பயணிப்பதால் சென்னையில் எப்போது பார்த்தாலும் பேருந்து, ரயில், மெட்ரோ ஆகியவற்றில் மக்கள் பயணித்தபடியே தான் இருப்பார்கள்.
ஒரு சிலர் ரயில், பேருந்து என மாறி மாறி பயணிக்கும் சூழலும் இருக்கும். ரயிலுக்கும், மெட்ரோவுக்கும் டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும் இருக்கும். இதனால் பேருந்துக்கு, ரயிலுக்கு, மெட்ரோவுக்கு என மாதாந்திர பாஸ் வாங்க வேண்டிவரும். இதனால், பயணிக்காத விடுமுறை நாட்களுக்கும் சேர்த்தே கட்டணம் செலுத்த நேரிடும்.
இதை மனதில் கொண்டும், மக்களின் நெருக்கடியான வாழ்வை கருத்தில் கொண்டும், சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் சிங்கப்பூரில் உள்ளதுபோன்ற ஒரு அதிரடித் திட்டத்தை ஜூன் 2-ம் வாரத்தில் இருந்து அமல்படுத்துகிறது.
அதன்படி, ஏடிஎம் கார்ட் போன்ற ஒன்று சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து மூலம் ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையின் எண்களைக் குறிப்பிட்டு ஆப் மூலம் தேவையான அளவு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அதில் எத்தனை முறை, எந்த வழித்தடத்தில் பயணிக்கிறோம் எனக்குறிப்பிட்டு அதற்கேற்ப கட்டணம் யூபிஐ மூலம் செலுத்திக் கொள்ளலாம்.
ஆப் திரையில் தோன்றும் க்யூ.ஆர். கோடைப் பயன்படுத்திக் கூட ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால், டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் நின்று நேரம் விரையமாவதைத் தடுக்கலாம். அத்துடன், டிக்கெட்டுக்கான சில்லறைப் பிரச்னை கூட இருக்காது.