தோலுரியக் காரணம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!
கோடை காலமோ, குளிர் காலமோ. தோலுரிதல் வளர்ச்சியைக் குறிக்கும் என ஒரு நம்பிக்கை உண்டு. “அச்சோ, என்தங்கம் வளருது” என தாய்மார்களும் அள்ளிக் கொஞ்சி தங்களது பிள்ளைகளுக்கு முத்தமிடுவது வழக்கம்.
ஆனால், அதன் பின்னணியில் எத்தனை அறிவியல் பூர்வ தகவல்கள் இருக்கிறது என “த காரிகை” பகிர்கிறது, கேளுங்கள்!
- எதனால் உறிகிறது?
நீண்ட நேரம் தண்ணீர் பருகாது இருக்கும் போது நாக்கு உழன்று போதலைப் பார்த்திருப்போம். அப்போது அந்த நாக்கும் “தண்ணீர்!, தண்ணீர்!” எனக் கேட்டு மூளைக்கு சிக்னலை அனுப்பும். அந்த சிக்னல் நமக்குத் தண்ணீர் பருகும் உணர்வைத் தூண்டும். அதேபோல் தான் தோலும். தோல் உறிதல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம், சரும வறட்சி.
- சூரிய ஒளி பாதிப்பு
சருமம் வறண்டு போவதற்கு சூரிய ஒளியில் உள்ள புற ஊதாக் கதிர்களும் ஒரு காரணம் ஆகும். இது தோல் உறிதல் பிரச்னையை உண்டாக்குகிறது. சருமத்தின் உணர்திறன் அப்போது அதிகரித்து அரிப்பு கூட ஏற்படலாம். நாளடைவில் வெடிப்பு, வறட்சியால் ரத்தம் வரும் சூழலும் ஏற்படும் அபாயம் உள்ளது. அல்ட்ரா வயலட் ரேஸ் என்ற புற ஊதாக் கதிர்கள் தோலின் மீது தொடர்ந்து படும் போது அது, புற்றுநோயைக் கூட ஏற்படுத்தும் என பல ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
- அழகு சாதனப் பொருட்கள்
அதிக கெமிக்கல் நிறைந்த அழகு சாதனப் பொருட்கள் என்றுமே ஆபத்துதான். அதில் சருமத்துக்கு கேடு விளைவிக்கும், உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் அடங்கியிருக்கலாம். முதலில், அவரவர் சருமத்தின் தன்மை என்ன? என அறிந்து கொள்ளவும். அதன் பின்பே சருமத்துக்கு ஏற்ப சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தலாம். அல்லது, இயற்கையிலேயே அழகு தரும் பொருட்களைப் பயன்படுத்தி மேனிக்கு அழகூட்டலாம்.
எப்போதும் “த காரிகை” பிரச்னைகளை மட்டும் சுட்டிக்காட்டாது. அதற்கான தீர்வுகளை தேர்வு செய்து வழங்குவதே எங்கள் சேவை.
- தடுப்பது எப்படி?
தோல் உறிதல் பிரச்னைக்கு மிகச்சிறந்த ஒரு அரு மருந்து நம் வீட்டின் சமையலறையிலேயே இருப்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், முதலில் போய் தேங்காய் எண்ணெயை எடுங்கள். அதனை டபுள் பாய்லிங் முறையில் சூடு செய்யவும். அதாவது ஒரு பாத்திரத்தில் கால்வாசி தண்ணீர் விட்டு சூடு செய்யவும். பின் அதனுள் மற்றொரு சின்ன பாத்திரத்தில், தேங்காய் எண்ணெயை வைத்து சூடேற்றவும். பின், அதனைக் கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும்.
- தேன்
தேன் இயற்கையிலேயே நல்ல மருத்துவ குணம் கொண்ட அரு மருந்தாகும். சிறிதளவு தேன் எடுத்து தோலுரிந்த இடத்தில் தடவவும். பின் 20 நிமிடங்கள் ஊறவிடவும். இதையடுத்து குளிர்ந்த நீரில் அந்த இடத்தைக் கழுவவும். கவனம், ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த நீரல்ல. இயற்கையாகவே குளிர்ந்திருக்கும் அல்லது சாதாரண அறை வெப்ப நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்திக் கழுவலாம். தினமும் 2 முறை இவ்வாறு செய்து வர தோல் வறட்சி குறையும்.
- ஆலிவ் எண்ணெய்
இரவு உறங்கச் செல்லும் முன் தோலுரியும் இடத்தில் தடவிக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் அதனைக் கழுவி நீக்கி, காட்டன் துண்டைக் கொண்டு சுத்தம் செய்ய தோலுரிதல் குறையும். அல்லது உறிந்த இடத்தில் நல்ல தோல், புத்துணர்வு பெற்ற செல்களுடன் ஆரோக்யமான தோல் வளரும்.
- மஞ்சள் தூள்
மஞ்சள் தூள் இயற்கையிலேயே ஆன்டி ஆக்சிடன்ட்டுக்கள் கொண்டது. 2 ஸ்பூன் மஞ்சள் தூளை தயிருடன் கலந்து தோலுரியும் இடத்தில் வைத்து மசாஜ் செய்யவும். மஞ்சள் தூளின் எரிச்சல் கெட்ட பாக்டீரியாக்களைக் கொல்லும் அதே நேரத்தில், தயிரின் குளுமை அந்த எரிச்சலைக் குறைக்கும் என நம்பப்படுகிறது. இது உடனடி ரிசல்ட் தரும் டெக்னிக்குகளில் ஒன்று.
- கற்றாழை
சரும அலர்ஜிக்கு மிகச் சிறந்த உடனடி நிவாரணம் என்பது கற்றாழைதான். கற்றாழையின் உட்புறமுள்ள ஜெல் போன்ற பகுதிக்கு இயற்கையிலேயே குளுமை தரும் சக்தி உண்டு. இதனை மசாஜ் செய்து 30 நிமிடங்கள் கழித்து சுத்தம் செய்தால் உடனடி பலனைக் கண்கூடே காணலாம்.