8 மணிக்கு மோடி… ஏழரையை கூட்டிய டிரம்ப்
பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி மக்களுடன் உரையாற்றினார். ஆனால், அதற்கு முன்பே 7.30க்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்து வேறு ஒரு கதையை கூறிச் சென்றார். இதனால், மீண்டும் யார் சொல்வது உண்மை என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் என்ன சொன்னார்கள் என்று விளக்கமாக பார்ப்போம்.

வழக்கம்போல 8 மணிக்கு மோடி
நாட்டின் முக்கியமான தருணங்களில் பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு மக்களுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பை கூட அவர் 8 மணிக்குதான் அறிவித்தார். அதேபோல, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான விவகாரம் குறித்து 8 மணிக்கு பேசுவதாக மோடி அறிவித்திருந்தார்.

ஏழரையை கூட்டிய டொனால்ட் டிரம்ப்
பிரதமர் மோடி 8 மணிக்கு மக்களுடன் பேசுவதாக கூறியிருந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 7.30 மணிக்கே செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அவர்தான் முழுமுதற் காரணம் என்றும், இருநாட்டு அணு ஆயுதப் போரை தடுத்து நிறுத்திவிட்டதாகவும் பெருமைப்பட தெரிவித்தார். இருநாடுகளுடனும் வர்த்தகத்தை நிறுத்தப் போவதாக சொன்னதாகவும், அதன்பின் இருவரும் போரை நிறுத்திவிட்டதாகவும் அவர் கூறினார். சொன்னப் போனால், இந்த போர் நிறுத்தத்தின் மொத்த கிரெடிட்டையும் எடுத்துக் கொண்டார்.

மோடி சொன்னது என்ன?
அதன்பின், 8 மணிக்கு மோடி நேரலையில் உரையாற்றினார். ஆனால், அதில் அவர் டிரம்ப் குறித்தோ, அவர் பேசியது குறித்தோ எதுவுமே பேசவில்லை. மாறாக, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுதான் போர் நிறுத்தம் செய்ததாக கூறினார். இந்த போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

பின்னர், எல்லையில் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதேபோல, இந்த வெற்றியை நமது நாட்டு பெண்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
யார் சொல்வது உண்மை?
போர் நிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே அதுகுறித்து டிரம்ப் போஸ்ட் செய்திருந்தார். இப்போதும், மோடி பேசுவதற்கு முன்பு அவர் பேசுகிறார். இதனால், யாரை நம்புவது என்று மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.