முடி வளர சிகிச்சை எடுத்தவர் மரணம்
கான்பூரில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த வினித்குமார் தூபே, திடீரென உயிரிழந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏன் தெரியுமா? சொட்டைத் தலையான அவர், முடி வளர சிகிச்சை எடுத்ததால்தான் உயிரிழந்தார் என்று அவரது மனைவி ஜெயா போலீஸில் புகார் அளித்திருக்கிறார். அப்படி என்னதான் நடந்தது என்று விளக்கமாகப் பார்ப்போம்.

என்ன நடந்தது?
கான்பூரைச் சேர்ந்தவரான வினித்குமார் தூபேவுக்கு ஜெயா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அவரது வயது 37. மார்ச் 11ஆம் தேதி ஜெயா தனது குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். வழுக்கை தலை கொண்டவரான வினித்குமார், முடியை டிரான்ஸ்ப்ளாண்ட் செய்ய முடிவு செய்து மருத்துவரை அணுகியிருக்கிறார்.

குடும்பத்தினர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிகிச்சையை முடிக்க நினைத்த வினித்குமார், வீட்டின் அருகே இருந்த சிகிச்சை மையத்தில் டிரான்ஸ்பிளாண்டிங்-ஐ தொடங்கினார்.
மர்மமான ஃபோன் கால்
மார்ச் 14ஆம் தேதி திடீரென ஜெயாவுக்கு மர்மமான ஃபோன் கால் ஒன்று வருகிறது. அதில், வினித்குமார் முகம் முழுவதும் வீங்கிவிட்டதாகவும் உடனடியாக வருமாரும் ஒருவர் சொல்லிவிட்டு தொலைப்பேசியை துண்டித்துவிட்டார். ஜெயா தனது கணவர், மருத்துவர் என யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தார். அந்த மர்ம நம்பருக்கு மீண்டும் அழைத்தாலும் ஸ்விட்ச் ஆஃப் என்று வருகிறது. பின்னர் வர் கான்பூருக்கு கிளம்பிவந்து, வினித்குமாரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.
வினித்குமாரின் மரண ரகசியம்
மார்ச் 15ஆம் தேதி மருத்துவமனையிலேயே வினித்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, ஜெயாவின் புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் சிகிச்சையினால்தான் கணவரது உயிர் பிரிந்தது என்று ஜெயா உறுதியாக கூறுகிறார். மருத்துவரின் அலட்சியத்தால் வினித்குமாரின் முகம் வீங்கி அவர் உயிரிழந்ததாக புகாரில் பதிவு செய்திருக்கிறார்.
போலீசார் ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் செய்த மருத்துவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் இதுவரை ஆஜர் ஆகவில்லை என்று தெரிகிறது. உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று விசாரணை நடந்து வருகிறது.